Breaking
Mon. Dec 23rd, 2024

2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி நடுவானில் மாயமான MH370 விமானம் விபத்தில் சிக்கியதாகவும் இதில் எவரும் உயிர் தப்பவில்லை எனவும் மலேசிய அரசு இன்று வியாழக்கிழமை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

பல மாதங்களாக மிகப் பெரியளவில் தெற்கு இந்தியக் கடலில் மேற்கொள்ளப் பட்ட பாரிய தேடலுக்குப் பின்னரும் இன்னமும் விமானத்தின் கதி என்னவென்று அறியப் படாத நிலையில் மலேசிய அரசு இப்பிரகடனத்தை மேற்கொண்டுள்ளது.

மேலும் இதன் மூலம் பலியாகி உள்ளனர் என உறுதிப் படுத்தப் பட்ட பயணிகளது உறவினர்கள் தமக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை சீன மலேசிய அரசுகளிடம் இருந்து பெறுவதற்கான வழி உருவாக்கப் பட்டுள்ளதுடன் சீன அரசிடம் இருந்து இதைப் பெறுவதற்காக அந்நாட்டு வெளியுறவு அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பின் மூலம் மலேசிய அதிகாரிகள் MH370 விமானத்தின் கதி குறித்து தீர்க்கமான முடிவைத் தான் அறிவித்துள்ளனர் எனத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் எனவும் இது அதில் பயணித்து உயிரிழப்பைச் சந்தித்து இருக்கக் கூடிய பயணிகளது உறவினர்களுக்கு இழப்பீட்டைப் பெற்றுத் தருவதற்கான சட்ட ரீதியான ஒரு நடவடிக்கையே என பிபிசியின் போக்குவரத்து நிருபர் ரிச்சர்ட் வெஸ்ட்கொட் தெரிவித்துள்ளது இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது.

மேலும் மலேசிய அரசின் இந்த அறிவிப்பை அடுத்து மலேசிய ஏர்லைன்ஸ் இழப்பீட்டை பெற்றுத் தருவதற்கான செயற்பாட்டுக்காக உயிரிழந்த பயணிகளின் குடும்பத்தினரை விரைவில் தொடர்பு கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளது. இதேவேளை மலேசிய அரசின் MH370 விமான விபத்து குறித்த அறிவிப்பானது அதில் பயணித்த பயணிகளது உறவினர்கள் பலருக்கு அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளதாகவும் பல பயணிகள் மலேசியன் ஏர்லைன்ஸிடம் இருந்து இழப்பீட்டைப் பெறத் தயாராக இல்லை எனக் கருத்துத் தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post