இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத்தில் இரு தினங்கள் மாத்திரமே எம்.பி.யாகவிருந்த ஜே.வி.பி.யின் தேசியப் பட்டியல் எம்.பி.யான சரத் மாயாதுன்ன நேற்று கன்னி உரையொன்றை நிகழ்த்தி விட்டு எம்.பி பதவியை இராஜினாமா செய்துகொண்டதையடுத்து அவருடைய இடத்துக்கு பிமல் ரட்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
கம்பஹாவில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிமல் ரட்நாயக்க தேசியப் பட்டியல் உறுப்பினராக ஜேவிபி நியமித்துள்ளது.
நாட்டில் இடம்பெறும் ஊழல்களுக்கு எதிராக போராடும் கட்சி யாக ஜே.வி.பி. உள்ளது. அக்கட்சியினர் இம்முறை தேர்தலின் போது கூட நாட்டில் ஊழலை ஒழிக்க மக்களின் ஆணையை கோரினார்கள்.
ஆனால் மக்கள் அதற்கான பூரண அங்கீகாரத்தை வழங்கவில்லை. தபால் மூல வாக்களிப்பு அரச ஊழியர்களுக்கானது. அவர்கள் கூட ஜே.வி.பியை அங்கீகரிக்கவில்லை. அதாவது ஊழல்கள் தொடர்பில் மக்கள் பெரிதாக அக்கறை கொள்ளாத நிலையே உள்ளது.
எனவே நான் பாராளுமன்ற உறுப்பினராக தொடர்வதற்கு விரும்பவில்லை. எனது இந்த ராஜினாமா கூட ஊழல்களுக்கு எதிரானதாகவே உள்ளது என சரத் மாயாதுன்ன நேற்று சபையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.