பிரேசிலில் இடம்பெறவுள்ள மாற்றுவலுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்ற, இலங்கையிலிருந்து 9பேர் அடங்கிய குழு அனுப்பப்பட்டுள்ளது. அனில் பிரசன்ன ஜயலத் என்பவரின் தலைமையின் கீழ் இந்த அணி அனுப்பப்பட்டுள்ளது. இவர் 100, 200 மீ. ஓட்டப் போட்டிகளிலும் நீளம்பாய்தலிலும் பங்குபற்றுகிறார். இவர் ஏற்கனவே இந்தப் போட்டிகளில் சாதனையாளராக உள்ளார்.
2012இல் இலண்டனில் இடம்பெற்ற போட்டிகளில் ஒரு வெண்கலப் பதக்கத்தை தங்கள் குழு வென்றெடுத்தாக குழுத் தலைவர் ஜயலத் தெரிவித்தார்.
செப்டெம்பர் 7இலிருந்து 18 வரை இடம்பெறும் இந்தப் போட்டிகளில் 4500 மாற்றுவலுத் திறனாளிகள் பங்குபற்றுகின்றார்கள். 176 நாடுகளிலிருந்து 528 வேறுபட்ட விளையாட்டுப் போட்டிகளில் இவர்கள் பங்கேற்கிறார்கள். சீனாவே மிக அதிகமான போட்டியாளர்களை அதாவது 808 போட்டியாளர்களை அனுப்பி வைத்துள்ளது. இலண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் 95 தங்கம், 71 வெள்ளி, 65 வெண்கலப் பதக்கங்களை சீன நாட்டு வீரர்கள் வென்றெடுத்திருந்தார்கள்.