இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நண்பரான, மாலைதீவு நாட்டின் முன்னாள் அதிபர் முஹம்மது நஷீத் இங்கிலாந்து நாட்டில் அகதியாக தஞ்சம் அடைந்துள்ளார்.
மாலைதீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் (49), கடந்த 2008-ம் ஆண்டு அந்நாட்டில் நடந்த பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராவார்.
2012-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்த நஷீத், ஆட்சியை அப்துல்லா யாமீன் என்பவரிடம் பறிகொடுத்தார்.
அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு முஹம்மது நஷீத் மீது பல்வேறு வழக்குகளை போட்டது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதியை கைது செய்ததாக தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் இவருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்தார். சிறைவாசத்தின் போது கடும் முதுகுவலியால் சிறையில் அவதிப்பட்ட அவருக்கு தண்டு வடத்தில் ஆபரேசன் நடத்த வேண்டியுள்ளது.
அதற்காக இங்கிலாந்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற முடிவு செய்து அரசிடம் அனுமதி கேட்டார்.அதற்கு மாலைதீவு அரசு அனுமதி மறுத்து விட்டது.
வெளிநாடு செல்லும் நஷீத் மீண்டும் திரும்பி வருவார் என அவரது உறவினர்கள் யாராவது உத்தரவாதம் அளித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அரசு அறிவித்து விட்டது.
அவரது நிலைமை மேலும் மோசமடைந்ததையடுத்து சிகிச்சைக்காக நஷீத் வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு மாலைதீவு அரசுக்கு அமெரிக்கா, இந்தியா மற்றும் இலங்கையின் வெளியுறவுத்துறை மந்திரிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து, ஆபரேஷனுக்காக இங்கிலாந்து நாட்டுக்கு செல்ல அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்ல மாலைதீவில் இருந்து முகமது நஷீத் புறப்பட்டுச் சென்றார்.
அப்போது இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையில் அங்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆபரேஷன் முடிந்து உடல்நிலை தேறியதும் மாலைதீவுக்கு திரும்பிவர முஹம்மது நஷீத் மறுத்து விட்டார். அவரது ஓய்வூதியம், மருத்துவ சலுகை ஆகியவற்றை யாமின் தலைமையிலான அரசு முடக்கி வைத்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து அரசு நஷீதுக்கு அகதியாக தஞ்சம் அளித்துள்ளதாக அவரது அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு வெளியானதும் லண்டன் நகரில் இருந்து முஹம்மது நஷீத் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மாலைதீவின் தற்போதைய அதிபராக உள்ள அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்து வைத்துள்ளார்.
தன்னை எதிர்ப்பவர்கள் மற்றும் தன்னைப்பற்றி விமர்சிப்பவர்களை எல்லாம் அடக்குமுறை அதிகாரத்தை பயன்படுத்தி தண்டித்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக மாலைதீவில் பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது.
தற்போது சர்வாதிகார ஆட்சிக்கு இணையான ஒரு அரசின்கீழ் மாலைதீவு சிக்கியுள்ள நிலையில் நானும் இதர எதிர்க்கட்சி தலைவர்களும் நாடுகடந்து வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்றே கருதுகிறோம்’ என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.