மாலைத்தீவு அதிபர் யாமீன் அப்துல் கய்யூம் சென்ற படகை வெடிகுண்டு வைத்து தகர்த்து அவரை கொல்ல உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் துணை அதிபர் அஹமத் அடிப் கடந்த அக்டோபர் 30-ம் தேதி கைது செய்யப்பட்டது, அந்நாட்டு அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கருகே வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது ஆகிய சம்பவங்களால் அங்கு கடந்த சில நாட்களாக பதட்டமான சூழல் நிலவி வந்தது.
சவூதி அரேபியாவில் உள்ள புனித மக்கா, மதினா நகரங்களுக்கு சென்று ஹஜ் யாத்திரையை நிறைவேற்றிய மாலைத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் தனது மனைவியுடன் கடந்த செப்டம்பர் மாதம் நாடு திரும்பியபோது படகு விபத்தில் சிக்கினார். விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்த அவர், டெல்லியில் இருந்து கடந்த மாதம் 28-ம் தேதி காலை அதிவேக படகின் மூலம் மாலைத்தீவுக்கு சென்றபோது, அவரது படகு திடீரென்று கடலில் வெடித்து சிதறியது.
இதில் அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இவ்விபத்தில் காயமடைந்த அதிபரின் மனைவி பாத்திமா இப்ராஹிம், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் மற்றொரு படகுமூலம் பத்திரமாக மாலத்தீவு தலைநகரான மாலே சென்றடைந்தார்.
அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூமை கொல்ல சதி நடந்ததாகவும், அதில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டதாகவும் அந்நாட்டு உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் ரகசியமாக விசாரித்து வந்ததில் இந்த சதியில் மாலத்தீவு துணை அதிபர் அஹமத் அடிப்-புக்கும் தொடர்பு இருந்ததாக செய்தி வெளியான நிலையில், இதுபற்றி தீவிர விசாரணை நடத்திய போலீசார், துணை அதிபரை கடந்த அக்டோபர் 30-ம் தேதி கைது செய்தனர். மேலும், இந்த கொலை முயற்சி தொடர்பாக மாலத்தீவு தூதரக மூத்த அதிகாரி மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த 4 பேர் மலேசியாவில் கைது செய்யப்பட்டனர். மலேசியாவின் தீவிரவாத தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
கடந்த சில நாட்களாக அங்கு பதட்டமான சூழல் நிலவி வந்தநிலையில், பல இடங்களில் அரசுக்கு எதிராக பேரணி நடந்தது. மேலும், அண்மையில் ஒரு லாரியிலும், தீவில் உள்ள கடற்கரை ரிசார்ட்டிலும் சக்தி வாய்ந்த வெடிபொருட்களும் கண்டெடுக்கப்பட்டள. இதையடுத்து, நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அதிபரின் செய்தி தொடர்பாளர் முவஸ் அஜி டுவிட்டரில், “மாலத்தீவில் 30 நாட்கள் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்படுகிறது. இது இன்று மதியம் 12 மணி முதல் அமலுக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார். இந்த பிரகடனத்தால் பாதுகாப்பு படைக்கு மிதமிஞ்சிய அதிகாரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.