Breaking
Mon. Dec 23rd, 2024

இலங்கை புற்றுநோய் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளைச் சங்கத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நிர்மாணிப்பாளர்கள் நலன்புரிச் சங்கத்தினால் ரூபாய் ஒரு இலட்சம் நன்கொடையாக வழங்கும் நிகழ்வொன்று நேற்று திங்கட்கிழமை (23) மாமாங்கத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் வை. தர்மரட்ணம் கருத்து தெரிவிக்கும் போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்று நோயின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் நோயாளர்களின் நலன் கருதி கொழும்பு மற்றும் மஹரகம புற்று நோய் வைத்தியசாலைகளுக்கு கதிர்வீச்சுச் சிகிச்சைக்கான வைத்தியசாலையின் அம்பியுலன்ஸ் சேவைக்கு மேலாக மாதாந்தம் ரூபாய் 50,000 த்திற்கு மேல் பிரயாணச் செலவு செய்யப்படுவதாக தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு வைத்தியசாலையில் புற்றுநோய் விடுதி சிறியளவில் உள்ளதனால் அதன் தேவை கருதி மட்டக்களப்பு திராய்மடுவில் ஒரு விடுதியை அமைப்பதற்கான நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் இப்றாலெவ்வை பணித்துள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு அருட்தந்தை மிலர் மற்றும் அப்போதைய உதவி அரசாங்க அதிபர் எஸ். அருணகிரிநாதன் ஆகியோர் இலங்கை புற்று நோய்ச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையை புனர்நிர்மாணம் செய்தனர். குறித்த அமைப்பிற்கு நிதி சேகரிக்கும் நிகழ்வு கடந்த 09.05.2016 திங்கட்கிழமை மட்டக்களப்பு மகாஜளக் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ரூபாய் ஒரு லட்சம் பெறுமதியான காசோலையை மட்டக்களப்பு மாவட்ட நிர்மாணிப்பாளர்கள் நலன்புரிச் சங்கத்தின் பொருளாளர் திருஞானசம்பந்தர் குமரன் மாவட்ட புற்றுநோய் சங்க கிளையின் தலைவரிடம் கையளித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட நிர்மாணிப்பாளர்கள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் வி. ரஞ்சிதமூர்த்தி, செயலாளர் பொ. புவனேந்திரபதி மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் க. வசந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

By

Related Post