மாவனல்லை சந்தியில் அமைந்துள்ள முஸ்லீம் கடையொன்று தீவைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரனைகளை விரைவுப்படுத்தும் படி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் மாவனல்ல பொலிசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தினை நேரடியாக சென்று பார்வையிட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஸ்தல விசாரணைகளினை மேற்கொண்டு வரும் பொலிஸாரிமே இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மாவனல்ல குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் சூத்திரதாரிகளினை கண்டறியும் பொருட்டு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது எனவும் இந்ந தீவைப்புச்சம்பத்திற்கான காரணங்களை கண்டறிந்துக் கொள்வதற்காக இரசாயணப்பகுப்பாய்வாளர்களும் ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பொலிஸ் பிரிவினர் அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து அமைச்சர் ரிஷாட் கருத்து தெரிவிக்கையில் “மாவனல்லையில் முஸ்லீம் ஒருவருக்குச் சொந்தமான வன்பொருள் கடையொன்று மே மாதம் 18 திகதி தீ வைத்து கொளுத்தப்பட்டது. நான் இந்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற போது, அந்த பகுதியில் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் பதற்றம் உருவாக்கியிருந்தது.
முஸ்லீம்களுக்கு எதிரான விரோத சக்திகள் இந்த நாசகார வேலையினை செய்திருப்பதாக அப்பிரதேச மக்கள் என்னிடம் குற்றம் சாட்டினர். இச்சம்பவத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்னை வலியுறுத்தினர். அண்மைகாலமாக முஸ்லீம் வர்த்தகர்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றது. இத்தகைய செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் என்ற ரீதியில் உயர்மட்ட அரசதரப்பினரிடம் கேட்டுக்கொள்கின்றேன்”.