- ஊடகப்பிரிவு
மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனாந்தர வர்த்தமனிப் பிரகடனம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை ஆராயவென சுயாதீன குழுவொன்றினை நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த குழுவில் உள்ளடக்கும் வகையில் பெயர் குறிப்பிட்ட பிரதிநிதி ஒருவரை தந்துதவுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனிடம் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு கோரியுள்ளது.
அமைச்சின் செயலாளர் உதய ஆர் செனவிரத்ன கையெழுத்திட்டு அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறுகேட்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் கடந்த மாதம் 31 ஆம் திகதி நடந்த உயர்மட்ட சந்திப்பினை அடுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனாந்தர வர்த்தமானியில் மறிச்சுக்கட்டி பிரதேச மக்களின் 4030.525 ஹெக்டேயர் விஸ்தீரணம் கொண்ட காணி கையகப்படுத்தப்பட்டதையடுத்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி, ஐ தே க பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான் உட்பட ஜம் இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்சில், முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் முஸ்லிம் சமூக நல அமைப்புக்கள் ஜனாதிபதியின் செயலாளருடன் உயர்மட்ட சந்திப்பை ஏற்படுத்தி உண்மை நிலவரங்களை எடுத்துரைத்திருந்தனர்.
இந்த சந்திப்பின் போதே வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய வேண்டும் அல்லது சுயதீனமான குழுவொன்றினை நியமித்து இந்த மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வழிவகை செய்யவேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தனர்.