யோஷித ராஜபக் ஷவுக்கு எதிரான ஆதாரங்களாக கருதப்படும் பல மின்னஞ்சல்கள் வெளிநாட்டில் இருந்து செயற்படும் ஒருவரால் அல்லது குழுவொன்றினால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சி.எஸ்.என். நிறுவனத்தின் ஆரம்ப மூலதனமான 234 மில்லியன் ரூபா எவ்வாறு பெறப்பட்டது என்பது தொடர்பில் விளக்கமளிக்காததை அடிப்படையாகவும் போலி ஆவணங்களை தயாரித்தமை, திட்டமிட்டு நம்பிக்கைத் துரோகம் செய்தமை , திட்டமிட்ட மோசடி, சுங்க சட்டத்தை மீறியமை மற்றும் நிறுவன சட்டங்களை மீறியமை, அரசாங்க சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பிலும் கைதாகியுள்ள யோஷித உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் யோஷித ராஜபக் ஷவினுடைய மின்னஞ்சல்கள் அடங்கிய இறுவட்டொன்று கைப்பற்றப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் 4000 இற்கும் அதிகமான மின்னஞ்சல்கள் உள்ள நிலையில், வெளி நாட்டிலிருந்து ஒருவர் யோஷிதவுடனான தொடர்புகள் அடங்கிய மின்னஞ்சல்களை அழித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றுக் காலை அரச சட்டவாதிக்கு அறிவித்துள்ளதாக மேல் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது அவர் சுட்டிக்கட்டினார்.
ஈ மெயில் பெக்கப் மிஸ்டர் யோஷித’ என பெயரிடப்பட்டிருந்த இறுவட்டு குறித்து பொலிஸார் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையிலேயே, பல மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டுள்ளமையும், வெளிநாட்டிலிருந்தே அந்த
நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை யும் தெரியவந்துள்ளது.
சி.எஸ்.என். குறித்த விசாரணைகளுக்கு தொடர்ச்சியாக பாரிய சவால்கள் உள்ள மையை இது தெளிவுபடுத்துவதாக அரச சட்டவாதி மன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.