Breaking
Thu. Nov 14th, 2024

மக்களின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணித்த ஒரு அரசாங்கம் என்ற வகையில் இன்று இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட உலகின் சகல நாடுகளினதும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், அந்த அங்கீகாரத்தின் மூலம் பல வருடங்களாக இந்த நாட்டு மக்களும் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் பேசிவந்த மின்சாரக்கதிரை என்ற சொல் அகராதியிலிருந்து நீங்கிச் சென்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் (28) நாரம்மலை மயுரபாத மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொள்ளும் தீர்மானங்களை வெளியிடும் மார்ச்சு மாதம் 28 ஆம் திகதி அதாவது இன்றைய தினம் ஐந்து வருடங்களுக்கும் மேலாக அரசியல்வாதிகளினதும் ஊடகவியலாளினதும் கல்விமான்களினதும் கவனத்தைப் பெற்ற ஒரு தினமாகும். அத்துடன் யுத்தத்திற்குப் பின்னர் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படும் நிலைமைகள் தொடர்பில் எத்தகைய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுமோ எமது பாதுகாப்புப்படையினருக்கு எத்தகைய குற்றச்சாட்டுக்கள் எழுமோ என்று சகலரும் அமைதியாக எதிர்பார்த்திருந்ததையும் ஜனாதிபதி நினைவுபடுத்தினார்.

ஆயினும் புதிய அரசாங்கத்தின் ஒரு வருட ஆட்சியின் பின்னர் பிறந்திருக்கும் இவ்வருடத்தின் மார்ச்சு மாதம் 28 ஆம் திகதி ஜெனீவா நகரில் மனித உரிமைகள் ஆணைக்குழு கூடியதா என்று கூட எவரும் அறிய மாட்டார்கள் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, புதிய அரசாங்கம் நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்த கண்ணுக்குத் தெரியாத வெற்றி அதுவாகும் என்றும் குறிப்பிட்டார்.

படையினரதும்  தாய்நாட்டினதும் கௌரவத்தைப் பாதுகாத்து புதிய அரசாங்கம் சர்வதேசத்துடன் நம்பிக்கையுடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட்ட ஒரு நாட்டில் மனிதர்களாக எழுந்து நிற்பதற்கு இன்று எல்லா இலங்கை மக்களுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இன்று பிற்பகல் நாரம்மலை மயுரபாத கல்லூரிக்கு வருகைதந்த ஜனாதிபதியை மாணவர்கள் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்று கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். கல்லூரியின் கனணி ஆய்வுகூடம், விளையாட்டு மைதானம் ஆகியவற்றையும் ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார். பாடசாலையில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சர் தயாசிரி ஜயசேக்கர, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, வடமேல் மாகாண ஜனாதிபதி விசேட கருத்திட்டப் பணிப்பாளர் சாந்த பண்டார, வடமேல் மாகாண  அமைச்சர் குணதாச தெஹிகம, வடமேல் மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் சமர் பிரசன்ன சேனாநாயக்க ஆகியோர் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் கல்லூரி அதிபர் துசார கருணாரத்ன ஆகியோர் உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் பெருமளவில் இந்த நிகழ்வில் கலந்து  கொண்டர்.

By

Related Post