திட்டமிட்டு நீர் மட்டத்தைக் குறைத்து நீர்மின் உற்பத்தியில் நெருக்கடி நிலையை ஏற்படுத்த மின்சார சபையில் உள்ள சிலர் முயற்சிகளை மேற்கொள்வதாக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மின்சார நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். மின்சாரக் கட்டமைப்பில் சமநிலையைக் குழப்பி மின் நெருக்கடியை தோற்றுவிக்க மின்சார சபையில் உள்ள சிலர் வெளியிலுள்ள குழுக்களுடன் இணைந்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது நாட்டில் வறட்சி காணப்படுவதனால் நீரேந்து பகுதிகளில் நீர் மட்டம் குறைவடைந்து நீர்மின் உற்பத்திக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் தற்போது நிலவும் வறட்சியை விட கடந்த காலங்களில் மோசமான வரட்சி நிலவிய போது நீரேந்து பிரதேசங்களில் நீர் மட்டம் குறையவில்லை எனவும் தற்போது நாட்டில் மோசமான வரட்சி ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.