Breaking
Sun. Dec 22nd, 2024

கடந்த 18.09.2016 ஆம் திகதி மாலை சக்தி தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட “மின்னல்” நிகழ்ச்சியில் பத்தரமுல்லை சீலரத்ன தேரர் கலந்து கொண்டார். வழமையாக தமிழ்மொழியில்  நடைபெறும் இந்நிகழ்ச்சி சிங்களத்தில் நடைபெற்றதோடு, ஒரு பௌத்த பிக்குவை மாத்திரம் வைத்து நடத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். “மஹிந்த அரசாங்கத்தில் வடபகுதியில் பாரிய அபிவிருத்தி வேலைகள் செய்தபோதிலும் தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு தவறிவிட்டனர்” இது பற்றி உங்கள் கருத்து என்னவென்று நிகழ்ச்சி தொகுப்பாளரான ஸ்ரீ.ரங்கா  அவர்களால் கேட்கப்பட்டது.  இக்கேள்விக்கான பதிலை தரக்கூடியவர் வடபுல அரசியல்வாதியாகவோ அல்லது அரசாங்க அதிகாரியாகவோ இருந்திருக்கவேண்டிய நிலையில், இக்கேள்வி தேரரிடம் தொடுக்கப்பட்டது உள்நோக்கம் கொண்டதா? என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது. பௌத்த தேரர் அளித்த பதில்கள், கேள்வி கேட்டவரின் நப்பாசைகளை திருப்தி படுத்தும் பாணியிலே அமைந்திருந்தன. வடக்கின் வசந்தத்தைப் பற்றி சம்பாசித்தபோது, அதற்கு அன்று பொறுப்பாக இருந்த முன்னாள் அமைச்சர் பசில் அவர்களை சாடி, கௌரவ அமைச்சர் றிஷாத் அவர்களையும் வம்புக்கு இழுத்தார். அவரின் விமர்சனம் வடபகுதியில் மக்கள் தேவைகளோ அபிவிருத்திகளோ நடைபெறவில்லை என்றும், இதற்குரிய குற்றச்சாட்டை றிஷாதின் மேல் சுமத்துவதுபோலும் அமைந்திருந்தது. அங்கு நடைபெற்ற மோசடிகள் பற்றி F.C.I.D கூட எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென்றும் பேசப்பட்டது. “F.C.I.D நடவடிக்கை எடுக்கவில்லை” என்பது, நிரூபிக்கக் கூடிய போதிய குற்றச்சாட்டுக்கள் இருக்கவில்லை என்பதையே உறுதிப்படுத்துகின்றது. எனவே, றிஷாத் நிரபராதி என்பது நிரூபணமாகின்றது. இங்கு மின்னலுக்குள் பொய்களும் பின்னப்பட்டுள்ளத்தை அறியலாம்.

வடக்கின் வசந்தத்திற்கு எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லாத நீதிமன்றத்திற்கு கல் எறிந்ததாக கூறப்படும் சம்பவம் பற்றி அங்கு பிரஸ்தாபித்தது ஆச்சரியத்திற்குரிய விடயமாகும். ஏனெனில், அது நீதிமன்றத்தால்  தீர்பளிக்கப்பட்டு  முடிந்த கதையாகும்.

கல்லாறு பிரதேசத்தில் 8000 ஆயிரம் ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டதாகவும், அதற்கான ஒப்பந்த வேலைகளை றிஷாதின் தம்பியிடமோ அல்லது மைத்துனரினமிடமோ கொடுக்கப்பட்டதாகவும் தேரர் கூறினார். கல்லாறு அப்பிரதேச மக்களின் வசிப்பிட  குடியேற்ற  பிரதேசமாக இருந்தபோது, அம்மக்கள் 1990 இல் புலிகளால் பலவந்தமாக துரத்தப்பட்டபின் 2012 இல் அப்பிரதேசம் வன இலாக்காவால் வனப்பிரதேசமாக வர்த்தமானி மூலம் இரவோடிரவாக பிரகடனப்படுத்தப்பட்டது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

03.09.2014 சனிக்கிழமை கிராமங்களும், கிராமிய  பாதைகளும் வனஜீவராசிகளின் இலாக்காவுக்கு இணைத்துக் கொள்வது சம்பந்தமாக மன்னார் கச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. தேசப்ரிய அவர்கள், வன ஜீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜய விக்கிரம பெரேரா, மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சார்ல்ஸ் நிர்மலநாதன், மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் ஸ்டேன்லி த மெல் மற்றும்  அரசாங்க உயரதிகாரிகள் முன்னிலையில், மன்னார் மாவட்டத்தில் வன ஜீவராசிகள் இலாகாவுக்கு சொந்தமான காணிகளில் எந்தவிதமான மீள்குடியேற்றங்களும் நடைபெறவில்லை என்றும் சில கடும்போக்குவாதிகளும், ஒரு சில ஊடகங்களும் கூறுவதுபோல்  அமைச்சர் றிஷாத் அவர்களால் எவ்வித சட்டவிரோத மீள்குடியேற்றங்களும் மேற்கொள்ளபடவில்லை என்று கூறியதோடு, றிஷாத் அவர்கள் மேற்கொண்ட மீள்குடியேற்றங்கள் அனைத்தும் சட்டரீதியாகவே அமைந்துள்ளன என்று உறுதிபடக்கூறியதை இங்கு கோடிட்டிகாட்ட விரும்புகின்றோம். எனவே, இங்கு உண்மைகள் பின்னப்பட்டிருப்பதை அறியலாம்.

வடக்கின் வசந்தத்தோடு தொடர்புபடாத “சதொச” விவகாரத்தை தேரர் பிரஸ்தாபித்தபோது நிகழ்ச்சி தொகுப்பாளர் அதனைத் தடுத்து நெறிபடுத்தியிருக்க வேண்டும்.  அமைச்சர் றிஷாத் அவர்கள் 2015 இல் அமைச்சர் பதவியை ஏற்றிருக்கும்போது 2014 இல் நடந்த நிதி சீர்கேடோன்றை றிஷாதின் தலையில் போட முனைந்தது அப்பட்டமான குரோதச் செயலாகும்.

உண்மை நிலை இப்படியிருக்க “காழ்புணர்வும் பொறாமையும் கொண்ட அரசியலில் மூக்குடைந்த ஒரு சில ஊடகவியலாளர்களால் முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்காக அயராது குரல் கொடுத்துவரும் அமைச்சர் றிஷாதின் மீது திட்டமிட்டு அரங்கேற்றப்படும் சேறுபூசும் நிகழ்சிகளால் முஸ்லிம்களும், நடுநிலை சிந்தனையாளர்களும் வெறுப்படைந்து ‘சக்தி’ தொலைகாட்சியை பகிஷ்கரிக்கும் நிலைக்கு இட்டுச்செல்லக்கூடும்” என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

எஸ்.சுபைர்தீன்

செயலாளர் நாயகம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

By

Related Post