மியன்மாரில் கடந்த ஜூன் மாதம் ஆரம்பம் முதல் பெய்து வரும் கடும் மழை மற்றும் வௌ்ள அனர்த்தத்தினால் ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அலுவலக செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இவ் வௌ்ளப் பெருக்கினால் 100 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன் 1.2 மில்லியன் ஏக்கர்கள் நெற்பயிர்ச்செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மியன்மார் அரசாங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆயினும் சில பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் கல்விக்காக மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரவட்டி டெல்ரா பிரதேச மக்களுக்கு (Irrawaddy Delta region) இன்னமும் அவதானத்துடன் இருக்கும் படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பருவ மாற்ற காலங்களின் போது மியன்மார் பிரதேசங்களில் வௌ்ளப்பெருக்கு, அதிக மழைவீழ்ச்சி ஏற்பட்டு அனர்த்த நிலைமை ஏற்படுவது வழமையானதொன்றாகி விட்டது.
கோமென் (Komen) என்ற சுழல் காற்றும் வௌ்ளப்பெருக்கும் இணைந்து மியன்மாரின் பல கிராமங்களை முற்றாக அழித்து விட்டன என மியன்மார் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ராக்ஹின் மாநிலம் அதிகமாக பாதிக்கப்பட்டதுடன் சுமார் 14 மாநிலங்கள் வரையில் அதிக பாதிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளன.
யங்கோன் பிரதேசத்தின் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பொறுப்பாளர் பற்றிக் புல்லர் (Patrick Fuller) இது பற்றி தெரிவிக்கும் போது வௌ்ளப்பெருக்கின் அழிவுகள் தற்போதும் மக்கள் மத்தியில் எஞ்சியுள்ளன என தெரிவித்துள்ளார். அத்துடன் வௌ்ளப்பெருக்கினால் ஏற்பட்ட சேற்றினால் மக்களின் வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. வீடுகளில் சேற்று மண்களை தவிர வேறெதும் எஞ்சவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரவட்டி மற்றும் நகாவுன் (Irrawaddy and Ngawun ) ஆறுகளில் நீரினளவு தற்போது சிறிது சிறிதாக குறைந்து கொண்டு வருவதனை அவதானிக்க முடிவதாக நேற்றை மியன்மார் செய்திப்பிரிவுகள் தெரிவித்துள்ளன. அத்துடன் சில நீர்த்தேக்கங்களில் நீரினளவு இன்னும் அதிகமாக இருப்பதனால் தாழ்வு நிலப்பகுதிகளிலுள்ள மக்களை உயர் நிலப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.