Breaking
Sun. Dec 22nd, 2024

முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் பர்மாவில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில், சனத்தொகை எதிர்பார்த்த அளவுக்கு கூடவில்லை என்று தெரியவந்துள்ளது.

மியன்மார் என்று தற்போது அழைக்கப்படும் பர்மாவில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாட்டின் மக்கள் தொகை 5 கோடியே 10 லட்சம் பேராக இருப்பது தெரியவந்துள்ளது. இது நாட்டின் மக்கள் தொகை குறித்து இதுவரை இருந்த கணிப்பீடுகளை விட 15 சதவீதம் குறைவாகும்.

1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் பர்மாவில் மக்கள் தொகையை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மார்ச் மற்றும் ஏப்ரலில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின் விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. நாட்டில் மொத்தம் 5. 1 கோடி பேர் வாழ்வதாக ஆரம்பகட்ட முடிவுகள் காட்டுகின்றன.

பர்மாவின் மக்கள் தொகை 6 கோடி என்ற அளவுக்கு இருக்கும் என்று பொதுவாக நம்பப்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கை சற்றே ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டும், நாட்டில் உள்ள பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் போன்றவற்றை கணக்கில் கொண்டும், மக்கள் தொகை 6 கோடியாக இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பே முழுமையாக நடைபெறவில்லை, பல தொலை தூர கிராமங்களில் எவ்வளவு பேர் இருப்பார்கள் என்பது அப்போது தோராயமாக மதிப்பிடப்பட்டது. ஆனால் இப்போது ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிறுவனம் மற்றும் சர்வதேச நிபுணர்களின் துணையோடு இந்த கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை மிகவும் நம்பகமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பல மொழி பேசும், பல இனத்தவர்கள் வாழும் நாடாக பர்மா உள்ளது. இருந்தும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது தங்களை இனரீதியாக குடிமக்கள் அடையாளப்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பை நடத்த ஐ நா உதவி செய்துள்ளது. இருந்தும் மக்களின் இன ரீதியான அடையாளத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்ற ஐ நாவின் யோசனையை பர்மிய அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர்.

ரொஹிங்கா முல்லீம்கள் வாழும் மேற்கத்திய ரஹானே மாநிலம் தவிர பிற இடங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு சுமூகமாகவே நடைபெற்றது. பர்மாவில் 8 லட்சம் ரொஹிங்காக்கள் வாழ்வதாக கணிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக வந்தர்கள் என்றே அரசாங்கம் கூறுகிறது. ரொஹிங்காக்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை. இது தவிர கச்சென் மாநிலத்தின் சில பகுதிகள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கேயும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெறவில்லை.

Related Post