Breaking
Fri. Nov 22nd, 2024

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மியான்மர் நாட்டில் ஜனாதிபதியாக தெயின் சீன் பதவி வகித்து வருகிறார். இங்கு கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயக உரிமை கோரி போராடி வந்தவரும், நோபல் பரிசு பெற்ற பெண்மணியுமான ஆங்சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மியான்மரில் 1962-ம் ஆண்டுக்கு பின்பு ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தல் இதுவாகும்.

மியான்மர் நாட்டு சட்டத்தின்படி வெளிநாட்டவரை திருமணம் செய்தவர் ஜனாதிபதி (ஆட்சித் தலைவர்) பொறுப்பை ஏற்க முடியாது. ஆங்சான் சூகி வெளிநாட்டவரை திருமணம் செய்தவர் என்பதால் அவரால் ஜனாதிபதி ஆக முடியவில்லை.

தேசிய ஜனநாயக லீக் கூட்டணி ஆட்சியை கைப்பற்றி விட்டாலும் 3 மாதங்களுக்கு பிறகே, அதாவது 2016-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி அன்றுதான் பதவி ஏற்க முடியும் என்று நிலை இருந்தது. இதைத்தொடர்ந்து ஆங்சான் சூகி தலைமையிலான கூட்டணி கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டது.

மியான்மரில் புதிய ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.

மியான்மரில் ராணுவ அரசு வகுத்த சட்டத்தின்படி பாராளுமன்ற மேல் சபை, கீழ்சபை இரண்டிலும் 4-ல் ஒரு பங்கு எம்.பி.க்களை ராணுவத்தால் நிரப்பிக் கொள்ள முடியும். இதனால் புதிய பாராளுமன்றத்தில் ராணுவ அதிகாரிகளும் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நிலை உள்ளது.

இந்நிலையில், மியான்மரின் அடுத்த அதிபர் மற்றும் இரண்டு துணை அதிபர்கள் பதவிக்கான பெயர்கள் மார்ச் 17-ம் தேதி தெரியும் என்று அந்நாட்டின் பாராளுமன்ற சேர்மன் மான் வின் கைன்ங் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

மேல் சபை, கீழ் சபை மற்றும் ராணுவம் மூன்றும் தன்னுடைய தரப்பிற்கு ஒரு அதிபர் வேட்பாளரை மார்ச் 17-ம் தேதிக்கு முன்பாக தேர்வு செய்ய வேண்டும். பின்னர் மார்ச் 17-அன்று பாராளுமன்றத்தில் அந்த பெயர்களை தாக்கல் செய்யப்படும்.

பின்னர் 664 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் வாக்குப்பதிவு நடைபெறும். அதிக வாக்குகள் பெறுபவர் அதிபராக தேர்வு செய்யப்படுவார். மற்ற இருவரும் துணை அதிபராக பொறுப்பேற்பார்கள்.

இரு சபைகளிலும் ஆங்சான் சூகியின் கூட்டணிக்கே பெரும்பான்மை இருப்பதால் அந்த கூட்டணியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாகவும், அதேபோல் இரு துணை ஜனாதிபதிகளில் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

புதிய அதிபரை தேர்வு செய்த பிறகுதான், தேசிய ஜனநாயக லீக் கூட்டணி முழுமையாக ஆட்சிப் பொறுப்பேற்கும். மியான்மரின் தற்போதைய அதிபர் தெய்ன் செய்ன் வரும் மார்ச் இறுதியில் பதவி விலகுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post