மீறாவோடை பாடசாலை மைதானக் காணிப் பிரச்சனைக்கு தீர்வு கேட்டு மூன்றாம் தரப்பினரை கொண்டு வந்து நீதி கேட்கப் போனால் அவர்களால் பிரச்சனை வருகின்ற போது தனிமையாக நின்று போராட வேண்டிய காலம் நிச்சயம் வரும் என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மீறாவோடை சக்தி வித்தியாலயத்தின் மைதான காணி பிரச்சனை தொடர்பான உயர்மட்ட மாநாடு சனிக்கிழமை கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.
தமிழ் முஸ்லிம் தரப்புக்கள் முக்கியமாக விளங்கிக் கொள்ள வேண்டும் இதில் பொது விடயமாக பாடசாலை அதனுடன் சேர்ந்து மைதானம் காணப்படுகின்றது என்பதை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும்.
மீறாவோடை காணிப் பிரச்சனைக்கு தீர்ப்பு வழங்குவதற்கு மூன்றாவது நபரை வரவைக்கின்ற பழக்கத்தை வைக்காதீர்கள். இதனால் பாரிய விளைவையும் பிரச்சனையையும் எற்படுத்தும் மூன்றாவது நபரான மதகுரு ஒருவரை கொண்டு வந்து சண்டித்தனம் காட்டுவது தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான பாரியதொரு விரிசலை ஏற்படுத்தும் இதனை நினைவில் கொள்ளுங்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமந்திரதேரர் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் இடம் பெற்ற காணிப்பிரச்சனை தொடர்பாக எவ்வாறு நடந்து கொண்டார் என்று நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இவரை போன்று இந்த மாவட்டத்தில் இந்துமத பெரியாரோ அல்லது முஸ்லிம் மத பெரியாரோ நடந்து கொள்ளவில்லை. ஏன் இந்தப் பிரதேசத்திற்கு வந்து கபளீரகம் செய்யப் பார்க்கின்றார் என்று நீங்கள் யோசிக்க வேண்டும்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கும் போது இதில் பொதுத் தேவையுள்ளது என்பதை இரண்டு தரப்பினரும் உணர்ந்து கொள்ளுங்கள். என்ன விட்டுக் கொடுப்பு செய்ய வேண்டுமோ, என்ன மாற்று வேலைகள் செய்ய முடியுமோ அதனை செய்ய வேண்டும்.
இதற்காக நீங்கள் மூன்றாம் தரப்பினரை கொண்டு வந்து நீதி கேட்கப் போனால் அவர்களால் வரும் பிரச்சனைகளுக்கு தனிமையாக நின்று போராட வேண்டி வரும். தமிழ், முஸ்லிம் மக்கள் சண்டை போட்டுக் கொண்டால் மூன்றாவது சமூகம் வேடிக்கை பார்க்கும். இதனால் இரண்டு சமூகங்களும் பாதிப்பே தவிர வேடிக்கை பார்ப்பவர்களுக்கல்ல.
எனவே இதற்கு கோறளைப்பற்று பிரதேச இணைத்தலைமைகள் தீர்ப்பு வழங்க முடியாது. இது நீதமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளமையால், நியாயமான தீர்ப்பு கிடைக்கும் அது வரை இரு சமுகமும் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டார்.