ஹஜ் குழுவினால் நேற்று உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட முகவர்களுக்கிடையிலான கோட்டா மீள்பகிர்வு பட்டியலிலும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறி ஹஜ் கோட்டா மீள் பகிர்வுக்கு முகவர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
2012 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதியரசர் வழங்கிய ஹஜ் வழிகாட்டல்கள்(Guide Lines SCFR 500/2012) மீண்டும் மீறப்பட்டுள்ளமையினால் கோட்டா பகிர்வினை ஏற்றுக் கொள்ள முடியாதென பெரும்பாலான ஹஜ் முகவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இதனால் இலங்கையருக்கான ஹஜ் கேள்விக்குறியாகியுள்ளது. ஹஜ் முகவர்களுக்கான நேர்முகப்பரீட்சை ஒரு சுயாதீனக் குழுவினால் நடாத்தப்பட்டாலும் கோட்டா பகிர்வு ஹஜ் குழுவின் சிபாரிசின் பேரிலேயே வழங்கப்பட்டுள்ளதால் மீண்டும் ஹஜ் வழிக்காட்டல்கள் மீறப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கோட்டா பகிர்வு நீதிமன்ற ஹஜ் வழிகாட்டல்களை மீறி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்குத் தடையுத்தரவு வழங்குமாறும் உயர் நீதிமன்றில் மனுவொன்றினைத் தாக்கல் செய்துள்ள மூன்று முகவர் நிலையங்களில் ஒருவரான ட்ரான்ஸ் வர்ல்ட் உரிமையாளர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
இம்முறையும் கோட்டா பகிர்வு ஹஜ் வழிகாட்டல்களை மீறி வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக எதுவித முறைப்பாடுகளும் இல்லாத முகவர் நிலையங்களுக்கு 10 புள்ளிகள் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் இம்முறை இந்தப் புள்ளி வழங்கலில் முறைகேடுகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறான காரணங்களை முன்வைத்து கோட்டா பகிர்வுக்கு பெரும்பாலான முகவர்கள் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர்.
எதிர்வரும் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றம் நாம் தாக்கல் செய்திருந்த வழக்கின் விசாரணையைத் தொடரவுள்ளது. அன்றைய தினம் நீதிமன்றில் நாம் எமது ஆட்சேபனைகளைத் தெரிவிக்கவுள்ளோம். இதனால் இலங்கையருக்கு ஹஜ் செல்வதில் பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டால் அதற்கு ஹஜ் குழுவே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
இவ்வருடத்துக்கான ஹஜ் கோட்டா பகிர்வில் முறைகேடுகள் இடம் பெற்றுள்ளதாக மூன்று முகவர் நிலையங்கள் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததையடுத்து நீதிமன்றம் தனது ஹஜ் வழிகாட்டல்களை மீறியுள்ளதாக தெரிவித்து ஹஜ் கோட்டா பகிர்வுக்கு இடைக்கால தடையுத்தரவு விதித்தது.
இதனையடுத்து ஹஜ் குழு புதிதாக ஹஜ் முகவர்களுக்கு நேர்முகப்பரீட்சை நடாத்தி கோட்டாவை மீள பகிர விருப்பம் தெரிவித்து உயர் நீதிமன்றில் மனுவொன்றினைச் சமர்ப்பித்து அதற்கிணங்கவே நேர்முகப்பரீட்சையை மீண்டும் நடாத்தி கோட்டாவை மீளப் பகிர்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த கோட்டா பகிர்விற்கே மீண்டும் பெரும்பாலான ஹஜ் முகவர்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
167 ஹஜ் முகவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு அவர்களில் 93 ஹஜ் முகவர்கள் தெரிவு செய்யப்பட்டு 2240 கோட்டா அவர்கள் நேர்முகப் பரீட்சையில் பெற்றுக் கொண்ட புள்ளிகளுக்கமைய பகிரப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
நேற்று உயர் நீதிமன்றில் நடைபெற்ற விசாரணையின் போதே கோட்டா பகிர்வு பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டது. கோட்டா பகிர்வு பட்டியலின் விபரங்களை வாதிகளான காரா, சப்ரா, ட்ரான்ஸ் வர்ல்ட் ஆகிய முகவர் நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கிய நீதிமன்றம் விசாரணையை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன் ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் அன்றைய தினம் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது.
வழக்கில் பிரதிவாதிகளாக முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அமைச்சின் செயலாளர் அப்துல் மஜீத், முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எம்.எம்.ஸமீம் மற்றும் ஹஜ் குழு உறுப்பினர்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
வாதிகளின் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வாவும், பிரதிவாதிகளின் தரப்பில் சட்டத்தரணி சுரேஷ் ஞானராஜூம் ஆஜராகியிருந்தனர்.
-Vidivelli-