ஒலுவில் மீன் பிடி துறைமுகத்தில் துறைமுக நுழைவாயில் மண்ணால் மூடப்பட்டுள்ளதால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முகமாக, மண் அகழ்வது தொடர்பான மீனவ சங்கங்கள் மற்றும் மீனவ அமைப்புக்கள் அவற்றின் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (24.09.2018) துறைமுகத்தில் இடம்பெற்றது.
மீனவ சங்கங்கள் மற்றும் மீனவ அமைப்புக்களின் விஷேட அழைப்பில், அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர், நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் அவர்களும் கலந்துகொண்டார்.
இங்கு சட்டத்தரணி அன்சில் உரையாற்றும் போது,
மண்ணை அகழ்வதற்கு உடனடியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 05 மில்லியன் ரூபா நிதியை வழங்க முன்வந்துள்ளதாகவும் அதற்கான துறைமுக அதிகார சபையின் அனுமதியை எதிர்பார்த்த வண்ணம் இருப்பதாகவும் கருத்துத் தெரிவித்தார்.
மேலும், இந்த சந்திப்பில் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திர படகு மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.நசீல், கல்முன கரையோர மாவட்ட மீன்பிடி சம்மேளனத் தலைவர் ஏ.பி.எம்.றஹீம், படகு உரிமையாளர்கள், மீனவர்கள், கடற்தொழிலாளர்கள், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள், கடற்தொழிலாளர்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு, இவ்விடயம் சம்பந்தமாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றிய கருத்துக்களை முன்வைத்தனர்.
(தி)