Breaking
Sun. Dec 22nd, 2024

-K.C.M.அஸ்ஹர் (முசலியூர்)-

நல்லாட்சியில் முஸ்லிம்கட்கு தொடராக அடிவிழுவதை அவதானிக்க முடிகிறது. மகிந்த யுகத்தில் முஸ்லிம்கட்கு அநியாயம் நடைபெறுவதாகவும், இதனை அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் கூறியே முஸ்லிம் மக்களும்,முஸ்லிம் தேசியத்தலைவரும் அரசைவிட்டு வெளியேறி மகிந்த யுகத்தை அஸ்தமிக்கச் செய்து மைத்திரி யுகத்தை ஆரம்பித்து வைத்தனர்.தமது பிரச்சினைகள் இலகுவில் தீரும் எனக் கண்ட கனவுகள் யாவும் கலைவதைக் காணமுடிகிறது.

எந்த பலசேனாக்களின் அறிக்கைகளாலும், அடாவடித்தனங்களாலும் மகிந்த அரசைவிட்டு வெளியேறவேண்டிய நிலைமை ஏற்பட்டதோ, அதே பலசேனா முன்னரைவிட பலமாக தமது செயற்பாட்டைச் செய்துகொண்டு நீதியமைச்சருடன் மட்டுநகர் வந்து மாநாடு நடாத்தியுள்ளது. பலமான பின்புலம் அவர்கட்கு உள்ளது.

பலசேனா,தமிழ்க்கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர் குழு, ஹிரு,சக்தி போன்ற ஊடகங்கள் அமைச்சர் றிசாதையும்,மீள்குடியேற்ற நடவடிக்கையையும் குறிவைத்து தொடராக தாக்கி வருகின்றன.சன்னார் காணி,முல்லைத்தீவு காணி,மறிச்சுக்கட்டி காணி,கரடிக்குழி,பாலைக்குழி,கல்லாறு,காயாக்குழி,எனத்தொடங்கி தொடராக தோல்வியைத்தழுவி வருகின்றனர். இக்காணிகள் சட்டரீதியாக வழங்கப்பட்டதை பிரதேச செயலக ஆவனங்கள் உறுதிப்படுத்தின. இக்காணிகள் வில்பத்து எல்லைக்குள் ஒருபோதும் வராது என்பதும் நிதர்சனமானது. உப்பாற்றிற்கு அப்பால்தான் வில்பத்து உள்ளது. இதனை அறியாது காட்போட் வீரர்கள் தடுமாறுகின்றனர்.

புலிப்பயங்கரவாதிகளால் வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 26 வருடங்கள் கழிந்தமையால் கழனிகளும், குடியிருப்புக்காணிகளும் காடுகளாயின. இதனை ஜி.பி.ஆர்.எஸ் தொழினுட்பம் மூலம் காடுகளாக பிரகடனம் செய்யப்பட்டன. இது இப்பிரதேச மக்களுக்குச் செய்யப்பட்ட பாரிய மனித உரிமை மீறலாகும்.அது மட்டுமன்றி இப்பிரதேச வரலாறு தெரியாமல் கட்டுக்கதைகளையும் பரப்பி வருகின்றனர்.உ-ம் பௌத்த சின்னங்கள் அழிக்கப்படுகின்றன.

இங்கு காணப்படும் புராதன பள்ளிவாயல்கள்,பாடசாலைகள்,வீடுகள்,கிணறுகள்,மையவாடிகள் சியாரங்கள் என்பன, இது முஸ்லிம்கள் வாழ்ந்த பூர்வீகப் பிரதேசம் எனச்சான்று கூறுகின்றன. குதிரைமலையிலே ஆதிமுஸ்லிம் குடியிருப்புக்கள் இருந்துள்ளன. அரேபிய வர்த்தக மையமாகவும் இப்பிரதேசம் இருந்தது.சியாரமும் இங்கு உள்ளது.

வடபுல முஸ்லிம்கள் இலங்கைப்பிரசைகள் இவர்கட்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிபெற்றுக்கொடுக்க வேண்டியதும்,மீளக்குடியேற்ற வேண்டியதும்,காணிகள் வழங்க வேண்டியதும் அரசின் பொறுப்பு இதிலிருந்து அரசு ஒருபோதும் விலக முடியாது.

புலிகளின் பலவந்த வெளியேற்றத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவனாகிய அமைச்சர் றிசாத் செய்துவரும் பணிகள் ஏராளம். உ-ம் காணிகள் பெற்றுக்கொடுத்தமை, வீடமைப்புத்திட்டங்கள்,தொழில் வழங்கியமை. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். மகிந்த அரசின் காலத்தில் அமைச்சரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பசில் ராஜபக்ச அவர்கள் அரசகாணிகளை முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காக சட்டரீதியாக விடுவித்துக்கொடுத்தமை வரலாற்றில் மறக்க முடியாதவை. மறிச்சுக்கட்டி காணிப்பிரச்சினை பூதாகரமாக எழுந்தபோது முந்நாள் அமைச்சர் பசில் அவர்கள் சிறையிலிருந்து இம்மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் சட்டரீதியானவை எனக்குரல் கொடுத்தார்.

மல்டசின் கோட்பாட்டின்படி சனத்தொகை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.இம்மக்களின் குடும்பங்களுக்கு 1-3 ஏக்கர் நெற் காணிகளே இருந்தன. இவற்றைத்துண்டாடி பிள்ளைகளுக்கு வீடு கட்டக்கொடுத்தால் இவர்களின்ஜீவனோபாயநெற்செய்கைமுற்றாகப்பாதிக்கப்படும். ஆகவே, இவர்களுக்கு அரசகாணிகள் வழங்க வேண்டிய கட்டாய நிலைமை இங்கே உள்ளது.

அம்பாந்தோட்டை, வெலிஓயா, வெலிக்கந்த, அனுராதபுரம், புத்தளம், வவுனியா போன்ற பிரதேசங்களில் காடுகளை அழித்து விமான நிலையம், ஹோட்டல், வீடமைப்பு, தோட்டச்செய்கை, சேனைப்பயிர்ச்செய்கை போன்றவை சிங்கள மக்களுக்காக செய்யப்படும் போது இது சூழல் அழிவு இல்லையா ? இதன்போது இன்று துள்ளிக்குதிக்கும் சேனாக்கள் ,ஊடகங்கள், சூழல் ஆர்வலர்கள் ஏன் மௌனித்திருந்தார்கள். ஏன் முஸ்லிம்கட்கு எதிராக காணி விடயத்தில் கொக்கரிக்கிறார்கள்.இது ஒரு தெட்டத்தெளிவான இனப்பாகுபாடு ஆகும்.அமைச்சர றிசாத் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது வடபகுதி விடுவிக்கப்படாமையால் அவரால் அங்கு முஸ்லிம்களை மீள்குடியேற்ற முடியாது போனது அது அவருக்கு மிகப்பெரும் கவலை ஆகும்.

இன்று அவர் வடபுல முஸ்லிம்களை பொறுத்தவரை ‘அவர் மீள்குடியேற்ற அமைச்சராக ,வீடமைப்பு அமைச்சராக, காணி அமைச்சராக ,வர்த்தக கைத்தொழில் அமைச்சராக தனியொரு மனிதராக நின்று பெரிதும் சேவை செய்து வரகின்றார்.இவரின் நேர்மை,திறமை,அரசியல் வளர்ச்சி அதிகரித்து வரும் அவரின் நாடு தழுவிய எழுச்சி என்பன சிலருக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது,

திருமலை பறிபோயிட்டு ,வன்னி போயிட்டு,மட்டு போயிடுமா? அம்பாறை சரிந்திடுமா என்ற அச்சத்தில் சிலர் தடுமாறுகின்றனர். றிசாத்துக்கு எதிராக சிங்கள மக்கள் மத்த்pயில் இருந்து ஒரு எதிர்ப்பலை உருவாக வேண்டும். அதில் நாம் குளிர் காய வேண்டும் எனக் காத்திருந்தோருக்கு இன்று வில்பத்து செய்தி ஒரு நற்செய்தியாகுமா? ஹிரு தொலைக்காட்சியில் வில்பத்து அழிக்கப்படுவதாக சில காட்சிகள் காட்டப்பட்டன.

அகத்திமுறிப்பு அளக்கட்டுப்பிரதேசம் இங்கு மின்சாரம்,கார்பட் பெருவீதிகள்,முந்நாள் இந்நாள் ஜனாதிபதிகள்,முந்நாள் இந்நாள் அமைச்சர்களின் படங்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.இங்கு ஒளிவு மறைவு இல்லை இது வெளிப்படை கிராமம் கம்பீரமாக காட்சி தருகிறது. அதில் குடி இருக்கும் குடும்பத்தலைவர் ஒருவர் என்னிடம் கூறினார்.இன்று மகிழ்வாக இங்கு நாம் வாழ அமைச்சர் உதவினார் அவருக்காக நான் சதா இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்றார்.இது ஒன்றே போதும்.

அடுத்த நாள் (30.12.2016) ஜனாதிபதி தலைமையில் சுற்றாடல் அதிகாரிகளுடனான கலந்துரையாடல்
01.வில்பத்தை நவீன தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்க வேண்டும்.
02.தராதரம் பாராமல் சட்டநடவடிக்கை வேண்டும்.
03.புதிய வர்த்தமானி வெளியிட வேண்டும்.வில்பத்தின் பரப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.
(குழு-விஷேட குழு ,ஊடகவியலாளர்கள், சுற்றாடல் அதிகாரிகள்.)

31.12.2016 பரிசாக அளக்கட்டிற்கு ஜனாதிபதி செயலக வாகனங்களில் அதிகாரிகள் ,நில அளவையாளர்கள்,பொலிசார் வருகை தந்தனர். கட்டப்பட்டுக் கொண்டிருந்த 150 வீடுகளின் கட்டுமானப்பணிகள் இடைநிறுத்தம்.இது நல்லாட்சியின் புது வருடப்பரிசு
முஸ்லிம் நாட்டு பரோபகாரிகளின் சகாத் நிதி மூலம் அமைச்சர் றிசாத்தின் முயற்சசி மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன.இதனை தடுப்பது ‘நுரைச்சோலை வீட்டுத்திட்டத் தடுப்புக்கு ஒப்பானது’
மஹிந்த அரசின் காலத்தில், இடம் பெயர்க்க வைக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக அரச காணிகள் சட்டரீதியாக விடுவிக்ப்பட்டு வழங்கப்பட்டன.இதில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை. இதனை எப்படி தவறு என கூறமுடியும்.இது தவறு என்றால் இலங்கையில் நடைபெறும் பெரும்பாலான அபிவிருத்தி திட்டங்கள் சூழலியல்படி பார்த்தால் தவறாகும்.

மீள்குடியேற்றப் பிரச்சினை அமைச்சர் றிசாத் மாத்திரம் சுமக்கவேண்டிய ஒரு தனி விடயமில்லை.இம்மக்களின் பிரச்சினைகளை கேலிக்கூத்தாக மு.கா. பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்க்கின்றனர்.

எல்லோரும் கைவிட்டனர் அமைச்சர் தனியாக சுமக்கிறார்.இது அமைச்சருக்கு எதிரான இனவாத சக்திகளுடன் இணைந்து செயற்படும் நேரமல்ல இது. பாதிக்கப்படப்போவது அப்பாவி அகத்திமுறிப்பு அளக்கட்டு மக்கள்.ஆகவே, பாராளுமன்றில் உள்ள 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் அரசுடன் பேசி தீர்வுகாண வேண்டும்.நாம் தூங்கினால் இனவாத சக்திகளின் கை ஓங்கிவிடும்.

By

Related Post