Breaking
Thu. Nov 14th, 2024

நீண்ட காலமாக இழுபரிக்குள்ளான நிலையில் இருந்த யாழ் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டிருந்த, முட்டுக்கட்டையான பிரச்சினைகள் பலவற்றுக்கு யாழ் கச்சேரியில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் தீர்வு எட்டப்பட்டுள்ளது.

அமைச்சர் றிஷாத்தின் நெறிப்படுத்தலில், அவரின் நேரடிப் பங்கேற்புடன், யாழ் அரசாங்க அதிபர் வேதநாயகன் தலலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன், யாழ் மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்ற  நடவடிக்கைகளுக்கான அமைச்சர் றிஷாத்தின் பிரதிநிதி மௌலவி பி.ஏ.எஸ்.சுபியான் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம், வேலணை, சாவகச்சேரி பிரதேச செயலாளர்கள், காணித்திணைக்கள உயரதிகாரிகள், திட்டமிடல் பணிப்பாளர்கள், முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

சுமார் ௦3 மணித்தியாலங்களாக இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் மீள்குடியேறியுள்ளோர், தாம் எதிர்நோக்கி வரும் கஷ்டங்கள், துன்பங்கள், அவஸ்தைகளை எடுத்துரைத்தனர்.

மௌலவி சுபியான் தீர்வு காணப்படவேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக, 11 அம்சங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் கையளித்து, விளக்கமளித்தார். சமுர்த்தி, மின்சாரம், மீள்குடியேற்றத்துக்கான காணிப் பிரச்சினை, உட்கட்டமைப்பு வசதிகள், குடிநீர்ப் பிரச்சினை, கல்விப் பிரச்சினை அடங்கலான பல பிரச்சினைகளுக்கு அமைச்சரும், அதிகாரிகளும் இணைந்து முடியுமான தீர்வை உடன் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் முடிவெடுத்தனர். பாரிய பிரச்சினைகள் சிலவற்றுக்கு மத்திய அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

வீடமைப்பதற்கான காணிப் பிரச்சினையைத் தீர்க்க, அரச காணிகளை அடையாளம் கண்டு உதவுமாறு அதிகாரிகளிடம் வேண்டினார். 25 ஆண்டு காலம் இந்தப் பிரதேசத்தில் வாழாது, மீண்டும் தமது தாயக பூமியை நாடி வந்துள்ள இந்த மக்களை, சகோதரர்களாக எண்ணுமாறும்,  மனிதாபிமானத்துடன் நோக்குமாறும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

அரச அதிபரும், அதிகாரிகளும், நெகிழ்வுத் தன்மையுடனும், சுமூக உறவுடனும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்று, மக்களின் கோரிக்கைகளுக்கு என்னென்ன செய்ய முடியுமோ, அனைத்தையும் செய்வதாக உறுதியளித்தனர்.

இந்த மாநாட்டில் ஆராயப்படாத எஞ்சிய பிரச்சினைகளுக்கு, எதிர்வரும் 03ஆம் திகதி யாழ் கச்சேரியில் அமைச்சரின் பங்கேற்புடன் இன்னுமொரு மாநாடு நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் உஸ்மானியா கல்லூரிக்குச் சென்ற அமைச்சர், அங்கு குழுமியிருந்த, மீள் குடியேறிய முஸ்லிம்களைச் சந்தித்து பேசியதுடன், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினார்.

அங்கு பேசிய முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் அமைச்சரினதும், அங்கஜன் எம்.பியினதும் துணிச்சலான செயற்பாடுகளைப் பாராட்டியதுடன், கச்சேரி உயர்மட்ட மாநாடு மீள்குடியேற்றத்தில் ஒரு வரலாற்றுத் திருப்பு மனை என சுட்டிக்காட்டினர்.

df308c1b-447f-46d2-9ce6-6f53da598643

b19ae1f9-ae74-4a43-b34f-d0d4c48a9713

By

Related Post