யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தின் 2ஆம் மற்றும் 3ஆம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகள் எதிர்வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார்.
விஞ்ஞானபீடத்தைச் சேர்ந்த தமிழ் – சிங்கள மாணவ குழுக்களுக்கிடையில் கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற கைகலப்பின் காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூடப்பட்டது.
இந்நிலையில், ஜூலை மாதம் 20 ஆம் திகதி மருத்துவ, விவசாய மற்றும் சித்த வைத்திய பீடங்களின் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பித்திருந்தன.
அதனைத்தொடர்ந்து, ஜூலை மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் கலைப்பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் மற்றும் வணிக முகாமைத்துவ பீடத்தின் முதலாம் மற்றும் இறுதியாண்டு வருடங்களின் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களையும் சுமூகமாக ஆரம்பிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையிலான குழுவினர் கடந்த 4 ஆம் திகதி சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதனடிப்படையில், தற்போது முகாமைத்துவ பீடத்தின் கல்விச் செயற்பாடுகளையும் முழுமையாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.