Breaking
Sun. Dec 22nd, 2024

சுஐப் எம் காசிம்

சுமார் 26 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிலங்கையில் புத்தளம் உட்பட பெரும்பாலான பிரதேசங்களில் அகதிகளாக அவல வாழ்வு வாழ்ந்து மீண்டும்    தமது பிரதேசத்தில் அமைதி ஏற்பட்டதனால் சுதந்திரக்காற்றை சுவாசிக்க வந்த முசலி மக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் புதிய வர்த்தமானி பிரகடனம் அவர்களின் சுயாதீன நடவடிக்கைகளை முடக்கியுள்ளது.

‘வில்பத்தை முஸ்லிம்கள் அழிக்கின்றார்கள்;, இயற்கை வளங்களை நாசமாக்குகின்றார்கள்’; என்ற இனவாதிகளினதும் இனவாதச் சூழலியலாளர்களினதும் இனவாத ஊடகங்களினதும் காட்டுக்கூச்சல்களையும் பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும் கருத்திற்கெடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, ரஷ்யாவில் வைத்து இந்த கறுப்புப் பிரகடனத்தை மேற்கொண்டுள்ளமை ஒரு வரலாற்றுத் துரோகமாகும்.

ஒரு தலைப்பட்சமான குறிப்பிட்ட ஒரு சாராரின் கருத்துக்களையும் வான்பரப்பிலிருந்து எடுக்கப்பட்டு புனையப்பட்ட ஒளி நாடாக்களையும் பெற்றுக்கொண்டு, நல்லாட்சி அரசாங்கம் இந்தப் பொல்லாத அநீதியை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது. விடுதலைப்புலிகள் முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக கருவறுத்த போதும் இறை நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் கொண்ட முஸ்லிம் சமூகம் இத்தனை ஆண்டு காலம் அகதியாக வாழ்ந்து  அமைதி ஏற்பட்டதனாலேயே  மீண்டும் தமது பூர்வீக நிலங்களில் குடியேறுவதற்கு  முனைந்தனர். முஸ்லிம்களின்  சொத்துக்களையும் அவர்களின் வளங்களையும் 26 ஆண்டுகளுக்கு முன்னர் புலிகள் அழித்த போதும் அவர்களின் அசையாச் சொத்துக்களான  நில புலங்களை எவராலும் அழிக்க முடியவில்லை எனினும் முஸ்லிம்கள் வாழ்ந்த பல கிராமங்களில் அவர்களின் காணகள் அபகரிக்கப்பட்டு சிற்சில குடியேற்றங்களையும் மேற்கொண்டனர். ஆனால் நல்லாட்சியின் இந்த பொல்லாத வர்த்தமானி பிரகடனம் முஸ்லிம்களை நாடோடிகளாக அலைந்து திரியும் ஒரு நிலையையே ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் வில்பத்து தொடர்பான சர்ச்சை எழுந்த போது பொதுபல சேனாவும், ராவண பலயக்களும் இனவாதச்சூழலியலாளர்களும் இனவாத இலத்திரனியல் ஊடகங்களை தமது கைக்குள் போட்டுக்கொண்டு ஆகாயப் பரப்பில் பறந்து திரிந்தும் தரைவழியில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டும் முஸ்லிம்கள் தொடர்பில் பல்வேறு அபாண்டங்களை நாடு பூராகவும் பரப்பினர். இவர்கள் மீளக்குடியேறிய முஸ்லிம்கள தமது பரம்பரைக் காணிகளில் கட்டியிருந்த கொட்டில்களை பிடுங்கி வீசி அட்டகாசம் செய்தனர்.

 

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு முழுமூச்சாக உதவிய தொடர்ந்தும் உதவி வருகின்ற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் மீது இனவாதிகள் தமது சுட்டுவிரலை நீட்டினர். ஊடகங்களிலும் முகநூல்களிலும் அமைச்சரைத் திட்டித்தீர்த்து கேலிச் சித்திரங்களை வரைந்து சிங்கள சமூகத்துக்கு அவர் தொடர்பான பிழையான எண்ணங்களை வளரப்பதில்; பிரயத்தனப்பட்டனர்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது அமைச்சு அலுவலகத்துக்குள் புகுந்த இனவாதக்கூட்டம் அங்கும் காட்டுத்தர்பாரை மேற்கொண்டது. இத்தனைக்கும் மேலாக முஸ்லிம் சமூகத்தின் கோடரிக்காம்புகள் அமைச்சர் தொடர்பான பொய்யான தகவல்களை வழங்கி இனவாதிகளுக்கு தீனி போட்டனர். முஸ்லிம் சமூகம் நாட்டுப்பற்றுள்ள சமூகமென காட்டுவதற்கும் வில்பத்துக் காட்டில் ஓர் அங்குலமேனும் பிடிக்கப்படவில்லiயென தெளிவுபடுத்துவதற்கும் அமைச்சர் பட்ட கஸ்டங்கள் கொஞ்ச நஞ்ஞமல்ல தலைநகரில்  ஊடகவிலாளர் மாநாடுகளை நடத்தியதோடு மாத்திரமல்ல பல தடவைகள் வில்பத்து பிரதேசத்துக்கு ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்று உண்மை நிலவரங்ளை விளக்கி இந்த அவச்சொல்லை நீக்குவதற்கு அமைச்சர் மேற்கொண்ட முயற்சிகள் நாடே அறியும். எனினும் இனவாதிகளும் இனவாதச் சூழலியலாளர்களும் தமது நிலைப்பாட்டில் இருந்து விடுபடாமல் பிரச்சாரத்தை முன்னெடுத்து முசலி சமூகத்தை அங்கிருந்து விரட்டியடிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளின் வெளிப்பாடே இந்த நவீன ரஷ்யப் பிரகடனம.;

‘முஸ்லிம்கள் ஓரங்குல காணியையேனும் வில்பத்துவில் பிடிக்கவில்லை. இந்த சமூகத்தின் மீதும் என் மீதும்  வீண்பழிகளையே சுமத்துகின்றார்கள் முடிந்தால் நிரூபித்துக் காட்டுமாறு சவால் விடுக்கின்றேன்.’ இவ்வாறு அமைச்சர் பாராளுமன்றத்திலும் ஊடகமாநாடுகளிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் பகிரங்க அறை கூவல் விடுத்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஆணைக்குழுவொன்றை நிறுவி இதன் உண்மை நிலையை வெளிக்கொணர உதவ வேண்டுமெனவும் அமைச்சர் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். எனினும் அமைச்சர்களான ராஜித, சம்பிக்க ரணவக்க மற்றும் சூழலியலாளர்களான திலக் காரியவசம், சமன் ரத்னப்பிர்ய போன்றவர்கள் மனச்சாட்சியுடன் கதைத்தனர்.

மன்னார் முஸ்லிம்களின் இந்த ஜீவ மரணப் போராட்டத்துக்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பலர் மற்றும் சமூக நல இயக்கங்கள் அரசியல்வாதிகள் பூரண ஒத்துழைப்பு வழங்கிய போதும் அமைச்சர் றிஷாட் மீது அரசியல் ரீதியில் காழ்ப்புணர்வு கொண்ட அரசியல் சக்திகளும் அவரது எழுச்சியை பொறுக்கமாட்டாத சிலரும் அமைச்சர் றிஷாட் தனது அரசியல் வளர்ச்சிக்;காக வில்பத்து விடயத்தை பூதாகரமாக்குகின்றார் என கதையளந்தனர். அமைச்சர் வில்பத்துவில் வாழைத்தோட்ம் வைத்திருக்கின்றார் என கூறியவர்களும் வில்பத்துவில் எந்தப் பிரச்சினையுமில்லையென கூறியவர்களும்  அமைச்சரே இதனைப் பெரிதுபடுத்துகின்றார் என நாக்கூசாமல் தெரிவித்தனர்.

வில்பத்து தொடர்பில் தற்போதுதான் படிக்க ஆரம்பித்துள்ளதாக வன்னி அரசியல்வாதிகள் சிலர் கூறியதுடன் முழுமையான தகவல்கள் கிடைத்த பின்னர் ஜனாதிபதியுடன் பேசலாம் என்று கூறியவர்களும் உள்ளனர.

இத்தனைக்கும் மத்தியிலேதான்; இந்தப்பிரகடனம் ரஷ்யாவில் இருந்து வெளிவந்துள்ளது. அமைச்சரைப்பற்றி இட்டுக்கட்டப்பட்ட கதைகளை கூறியோர் இப்போது வில்பத்துக்காக போராட வேண்டுமெனவும் முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைய வேண்டுமெனவும் கூப்பாடு போடுவதும் தற்போது சப்புக்கட்டப்பட்ட அறிக்கைகனை விடுவதும் வேதனையானது.

புதிய பிரகடனத்தால் முசலி மக்களின் சுயாதீனமான வாழக்கை முடக்கப்பட்டு காட்டுவிலங்குகளுக்கு மேலும் சுதந்திரமாக நடமாட வழிசெய்யப்பட்டுள்ளது. மிருகங்களில் இரக்கம் காட்டும் நல்லாட்சி மனிதர்கள் மீது கருணை காட்டுவதில் ஏன் தயங்குகின்றதோ தெரியவில்லை.

Related Post