கட்சியின் தலைமைக்கு கட்டுப்பட்டு உறுப்பினர்கள் நடக்காவிடின் கட்சித் தலைமைப் பதவியினை இராஜினாமா செய்துவிட்டு ஜனாதிபதியாக மட்டும் செயற்படும் நிலை ஏற்படும். அத்துடன் பாராளுமன்றத்தையும் கலைக்கவேண்டி வரும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தினை ஆதரிப்பது தொடர்பில் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த பல உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சுயாதீனமாக முடிவினை எடுப்பதற்கு எமக்கு தலைமை அனுமதி வழங்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக மட்டும் நாம் செயற்படமுடியாது. இவ்விடயத்தில் எமது நிலைப்பாட்டுக்கு கட்சியின் தலைமை இணங்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் பாராளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் கலைக்காது அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை கொண்டுசெல்ல வேண்டும். தற்போது தேசிய அரசாங்கமே ஆட்சியில் உள்ளது. எனவே பாராளுமன்றத்தை கலைக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் பல உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் எடுத்துக்கூறியுள்ளனர்.
உறுப்பினர்களின் கருத்துக்களையடுத்து உரையாற்றிய ஜனாதிபதியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, இடைக்கால வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் நீங்கள் விரும்பியவாறு கருத்துகளை, விமர்சனங்களை தெரிவித்திருக்கலாம். ஆனால் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்று கட்சியின் தலைமை முடிவுசெய்துள்ளது. எனவே இந்த முடிவுக்கு அனைவரும் கட்டுப்படவேண்டும்.
அவ்வாறு கட்சியின் தலைமைக்கு நீங்கள் கட்டுப்படாவிடின் கட்சித் தலைமைப் பதவியிலிருந்து நான் இராஜினாமா செய்து ஜனாதிபதியாக மட்டும் செயற்படும் நிலை உருவாகும். அத்துடன் பாராளுமன்றத்தையும் கலைக்கவேண்டி வரும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்திலேயே வரவுசெலவுத் திட்டத்தினை ஆதரிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 163பேர் வாக்களித் திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.