அரசியல் ஆசை இருந்தாலும் மக்களின் ஆதரவு இன்றி மஹிந்த ராஜபக் ஷவினால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது. கடந்த ஆட்சியின் ஊழல் மோசடிகளை மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. முடிந்தால் அடுத்த தேர்தலில் மஹிந்த போட்டியிட்டு வென்று காட்டட்டும் என்றும் அக்கட்சி சவால் விடுத்தது.
தான் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் ஜே.வி.பி.யின் கருத்தினை வினவியபோதே அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கடந்த பத்து வருடங்களில் நாடு எல்லாவகையிலும் சீரழிந்த காரணத்தினால் தான் மக்கள் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தினர். மஹிந்த ராஜபக் ஷ வின் அரசாங்கத்தின் இந்த பத்து வருட ஆட்சிக் காலத்தில் தேசிய ஒற்றுமையில் பாரிய விரிசல் நிலைமை உருவாகியது. மதக் கலவரங்களும் அடக்குமுறை செயற்பாடுகளுமே மேலோங்கிக்காணப்பட்டன. சிறுபான்மை மக்கள் மட்டுமின்றி சிங்கள மக்களும் பல சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டனர். இந் நிலைமையில் இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் அனைத்து மக்களின் ஒன்றிணைந்த சிந்தையாலும், அனைத்து மக்களின் ஆதங்கத்தினாலுமே மாற்றமடைந்தது. நிறைவேற்று ஜனாதிபதியின் சர்வாதிகார போக்கினை கட்டுப்படுத்தி நல்லாட்சியை பலப்படுத்த இந்த அரசியல் மாற்றம் கிடைத்துள்ளது.
இந் நிலையில் மக்கள் வெறுக்கும் நபராகவே இன்று மஹிந்த ராஜபக் ஷ மாறியுள்ளார். கடந்த ஆட்சியில் செய்த தவறுகள், பொருளாதார மற்றும் வாழ்வாதார நெருக்கடிகள், அடக்குமுறைகள் என அனைத்தும் மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்துள்ளன. மஹிந்தவின் அரச குடும்பம் செய்த மோசடிகள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இவ்வாறானதொரு நிலைமை யில் மக்கள் மீண்டும் மஹிந்த ராஜ பக் ஷ மற்றும் அவரது குடும்ப அரசியலுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள். எனினும் மஹிந்தவின் தோளில் பயணித்த ஒரு சிலர் இன்றும் அவரை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர். மக்களின் அதரவு இல்லாத இவர்கள் ஒருசிலர் தமது அரசியலை தொடர்ந்தும் கொண்டு செல்லவே இவ்வாறாக முயற்சிக்கின்றனர். அதற்கும் மக்கள் இனிமேல் இடம்கொடுக்கமாட்டார்கள்.
எனவே மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அரசியலுக்கு வந்து அதிகாரங்களை கைப்பற்றும் முயற்சி இனியொரு போதும் நடக்கப் போவதில்லை. ஆனால் மஹிந்த அரசியலில் ஈடுபட எந்தத் தடைகளும் இல்லை. மக்களின் ஆதரவு இல்லாது அவரால் அரசியல் செய்ய முடியாது, முடிந்தால் மஹிந்த ராஜபக் ஷ அடுத்த தேர்தலில் போட்டியிட்டு வென்று காட்டட்டும் என்றார்.