Breaking
Mon. Dec 23rd, 2024

கொழும்பிலிருந்து எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உள்ள புத்தளத்தில் குப்பைகளைக் கொண்டுவந்து கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிடுமாறும், அரசு மேற்கொண்டிருக்கும் முடிவை இரத்துச் செய்யுமாறும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், புத்தளம் சத்தியாக்கிரக போராட்டக் களத்திலிருந்து வேண்டுகோள் விடுத்தார்.

”கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் திட்டத்திற்கு” எதிராக, புத்தளம்-கொழும்பு முகத்திடலில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று மாலை (07/10/2018) கலந்துகொண்டு, கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் இங்கு மேலும் கூறியதாவது,

புத்தளம் மக்களின் நியாயமான இந்தப் போராட்டத்திற்கு எமது கட்சியும், தலைமையும் எல்லாவகையிலும் ஒத்துழைப்பு வழங்கி, புத்தளத்திற்கு குப்பைகள் கொண்டுவரப்படுவதை முழுமையாக எதிர்க்கும். ஏற்கனவே இந்தத் திட்டம் கருக்கூட்டிய போது அமைச்சரவையில் தனியே நின்று போராடியிருக்கின்றேன். அதேபோன்று பாராளுமன்றதிலும் எமது கட்சியும் நானும் எதிர்த்து குரல் கொடுத்துள்ளோம்.

ஜனாதிபதி தேர்தல்,பொதுத்தேர்தல் ஆகியவற்றில் புத்தளம் மக்கள் நூறு சதவீதம் பங்களித்து இந்த ஆட்சியை கொண்டுவருவதில் உழைத்துள்ளனர். அதேபோன்று ஏனைய தேர்தல்களிலும் இவ்விரு அரசியல் தலைவர்கள் சார்ந்த கட்சிகளுக்கு, புத்தளம் மாவட்ட மக்கள் நிறையவே பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

புத்தளம் மக்களின் மனங்களையும் அபிலாஷைகளையும் துளியளவும் கணக்கிலெடுக்காமல், சண்டித்தனமாக ஆட்சியாளர்கள் நடந்துகொள்ளக் கூடாது. அவர்களின் விருப்புக்கு மாறாக பலவந்தமாக குப்பைகளைக் கொட்ட எடுக்கும் முடிவுக்கு, இந்த மக்களுடன் சேர்ந்து மக்கள் காங்கிரஸும் பூரண எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றது. பார்ப்பாரும் கேட்பாரும் அற்ற சமூகமாக புத்தளம் மக்களை எண்ணி, ”போராட்டத்தில் நிற்பவர்களையும் ஆர்ப்பாட்டம் செய்வோரையும் சிறையில் அடைப்போம்” என மார்தட்டி பேசுவதை நிறுத்தி, உங்கள் முடிவை மாற்றுங்கள்.

சமுதாயத்தின் விடிவுக்காகவும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் உங்கள் கால நேரங்களை தவிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எமது பாராட்டுக்கள். இந்தப் பயணத்தில் உங்களுடன் இணைந்து எமது கட்சி எல்லாவகையிலும் உதவும்.

பிரதியமைச்சர் அமீர் அலி இங்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,  

“இந்தப் போராட்டத்தை நமது கட்சியும் தலைமையும் நூறு சதவீதம் சரிகண்டுள்ளது, பாராளுமன்றத்தில் கடந்த காலத்தில் இருவர் மாத்திரமே இதற்கெதிராக குரல் கொடுத்துள்ளனர். கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவவியுமே புத்தளம் குப்பைக்கு எதிராக எதிர்த்து காரசாரமாக பேசியுள்ளனர்.

இந்த மாவட்டத்திலே கழிவுகளை கொட்டி, பிரச்சினைகளை பூதாகாரமாக்கும் விடயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒருபோதும் துணை நிற்காது என்றார்.

-ஊடகப்பிரிவு-

 

Related Post