வெளிநாட்டு தூதுவராலயங்களின் பிரதானிகளாக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் ஆட்சியாளர்களது முதன்மைக் குடும்பத்து உறவினர்கள் பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். தூதுவராலயங்களுக்கு சொந்தமான கட்டடங்களை விற்பனை செய்து அந்தப் பணத்தை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டுள்ளமைக்கான தகவல்கள் வெளியாகியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் நேற்று செவ்வாய்க்கிழமை தினேஷ் குணவர்தன எம்.பி. யினால் முன்வைக்கப்பட்ட வெளிநாட்டு உடன்படிக்கைகளுடன் தொடர்புபட்ட பத்து நாடுகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் மங்கள சமரவீர இங்கு மேலும் கூறுகையில்;
பத்து இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்காகும். இதனை பிரதமர் மிகத் தெளிவாக இந்த சபையில் கூறியிருந்தார். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் 2020 ஆம் ஆண்டளவில் இந்த இலக்கினை அடைந்து கொள்வதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. 2009 முதல் 2015 வரையான காலப்பகுதியில் இந்நாட்டில் எந்தவொரு வேலைவாய்ப்பிற்கும் வழிவகுக்கப்பட்டிருக்கவில்லை. எனினும் தற்போது நாம் அதனை மாற்றியமைத்து வருகிறோம். கடந்த ஆட்சிக்காலத்தில் ஏற்றுமதியானது 16.7 வீதமாக குறைவடைந்து காணப்பட்டது.
உலகப் பொருளாதாரத்தோடு நாம் பயணிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். அந்த வகையில் உலகப் பொருளாதார போட்டித்தன்மைக்கு இலங்கை மிடுக்குடன் நடைபோட வேண்டும் என்பதையே விரும்புகிறோம். அவ்வாறானதொரு நிலைமையின் போது எவ்வாறு நாம் சர்வதேச முதலீட்டாளர்களை உள்வாங்கிச் செயற்படுவது என்பது குறித்து சிந்திக்கவேண்டும்.
இன்றைய நிலையில் இலங்கை அரசாங்கமானது ஐரோப்பிய ஒன்றியத்துடனும் அமெரிக்காவுடனும் பொருளாதார உறவுகளைப் பேணி வருகின்றது.
நாம் மிகவும் சரியான பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதும் நிரூபணமாகியிருக்கின்றது.
சர்வதேச முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சூழலை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம்.
சீனாவைப் பொறுத்த வரையில் அந்நாடு 138 வெளிநாட்டு உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ள அதேவேளை இந்தியா 97, வியட்நாம் 81 என்ற ரீதியில் முதலீட்டு ஒப்பந்தங்களை மேற்கொண்டு தமது நாட்டு பொருளாதாரங்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கின்றன.
மேற்போன்ற நாடுகள் இவ்வாறு உடன்படிக்கைகளை மேற்கொண்டு பொருளாதாரத்தில் அக்கறை கொண்டுள்ள அதேவேளை எமது நாடானது வெறும் 28 உடன்படிக்கைகளையே கைச்சாத்திட்டிருக்கின்றது.
எமது நாட்டை விட மேற்கூறப்பட்ட நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. எனினும் தற்போது நாம் இந்நிலைமைகளை மாற்றியமைத்திருக்கின்றோம். தற்போது நாம் 40 உடன்படிக்கைகளாக அதிகரித்திருக்கின்றோம். இலங்கையானது ஆடை மற்றும் தேயிலை ஏற்றுமதிகளில் மாத்திரம் தங்கியிருத்தலில் இருந்து விடுபட்டு வெளியில் வரவேண்டிய கட்டாயம் எழுந்திருக்கின்றது. நாம் மூடிய பொருளாதாரத்தில் தொடர்ந்தும் நிலைத்திருக்க முடியாது.
மேலும் முன்னைய ஆட்சியாளர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்து வந்த 67 வெளிநாட்டுத் தூதுவராலயங்களில் 15 உத்தியோகத்தர்களே அரச நியமனத்தின் ஊடாக சென்றிருந்தனர். ஏனைய அனைத்து நியமனங்களும் அரசியல் நியமனங்களாகவே இருந்தன.
முன்னைய ஆட்சியாளர்களது முதன்மைக் குடும்பத்து உறவினர்களே இவ்வாறு அரசியல் நியமனம் பெற்றிருந்தனர். இவ்வாறு அரசியல் நியமனம் பெற்றவர்கள் பாரிய நிதிமோசடிகளில் ஈடுபட்டுள்ளமை மற்றும் வெளிநாட்டுத் தூதுவராலயங்களுக்குச் சொந்தமான கட்டடங்களை விற்பனை செய்து அந்த பணத்தை தமது சொந்த வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளமை போன்ற தகவல்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.
இது தொடர்பில் விசாரணைகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் வெளிநாட்டுத் தூதுவராலய பிரதானிகளின் எண்ணிக்கையை 15 இலிருந்து 34ஆக அதிகரித்துள்ளோம். நன்கு கற்றுத் தேர்ந்த அனுபவமுடையவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். அதுமாத்திரமின்றி வெளிநாட்டுத் தூதுவராலயங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகின்றன என்றார்.