தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும் இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் பாரியார் மங்கையற்கரசி தனது 83 ஆவது அகவையில் இலண்டனில் காலமானார்.

இலண்டனில் தனது பிள்ளைகளுடன் வசித்துவந்த அவர் நேற்று (9) திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் இன்று இயற்கை எய்தினார்.

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் அரசியலுக்கு துணையாக நின்று செயற்பட்ட மங்கையற்கரசி, அமிர்தலிங்கம் கொலை செய்யப்பட்ட பின்னர் இலங்கையிலிருந்து வெளியேறி தமிழகத்திலும், பின்னர் இலண்டனிலும் வசித்து வந்தார்.

மங்கையற்கரசி 1933 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மூன்றாம் திகதி யாழ்ப்பாணம் மூளாய் என்ற கிராமத்தில் பிறந்தார்.

காலஞ்சென்ற மங்கையற்கரசியின் இறுதிச் சடங்குகள் இலண்டனில் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழரசுக்கட்சியில் முக்கிய தலைவராக இருந்து அமிர்தலிங்கம் செயற்பட்டு வந்த காலம் முதல் அவரின் அரசியல் செயற்பாடுகளில் தீவிர ஈடுபாடு காட்டி அவருடன் இணைந்து செயற்பட்டு வந்தவர் மங்கையற்கரசி என்பது குறிப்பிடத்தக்கது.