Breaking
Wed. Nov 20th, 2024

கிழக்கு மாகாணத்தில் இனிவரும் காலங்களில் தமிழரோ அல்லது முஸ்லிமோ முதலமைச்சராக வரலாம். ஆனால் தற்போது இருந்த முதலமைச்சர் வரக்கூடாது என்று நான் பிரார்த்திக்கின்றேன் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார பிரதி அமைச்சரின் நிதி ஓதுக்கீட்டின் மூலம் மாஞ்சோலை மற்றும் செம்மண்னோடை கிராமத்தில் பல வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

அரசியலில் இருக்கும் வரை அதிகாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அழகாக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் நாங்கள் படித்துக் கொண்ட அரசியல். அதிகாரத்தை அலங்கோலமாக்கி பத்து வருடத்திற்கு என்னை அசைக்க முடியாது என்று முன்னாள் கிழக்கு முதலமைச்சர் பேசினார்.

என்னுடைய இருபது வருட அரசியல் வாழ்க்கையில் கட்டடங்களை திறந்து வைப்பதாயின் முற்றுமுழுதாக கட்டுமானம் முடிந்த பின் திறந்து வைப்பேன். ஆனால் முன்னாள் கிழக்கு முதலமைச்சர் கட்டி முடிப்பதற்கு முன்னர் திறந்து வைத்து விட்டு செல்கின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான கேவலம் கெட்ட அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கிழக்கு முதலமைச்சாரக வந்ததும் கிழக்கு மாகாணத்தில் இருந்து யாரையும் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக அனுப்ப மாட்டேன் என்று சூழுரைத்தார்.

ஆனால் கிழக்கு மாகாணத்திற்கு முதலமைச்சராக வந்ததன் பிற்பாடுதான் வெளிநாட்டுக்கு பெண்கள் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்கள் என்பதை நான் கூறுகின்றேன். 4117 பட்டதாரிகளுக்கு பட்டதாரி நியமனம் கொடுத்து விட்டுத்தான் கிழக்கு மாகாண சபைக்கு செல்வேன் என்று சொன்னார். ஆனால் மாகாண சபை கலைந்து விட்டது. இன்னும் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவில்லை.

குறானை சுமந்தவர்கள் யாரும் பொய் சொல்லக் கூடாது. குறானை சுமக்கும் அரசியல்வாதிகள், உலமாக்களாக இருந்தாலும் சரி இலங்கையில் பொய் பேசுகின்ற முதலாவது ஹாபிழை மட்டக்களப்பு ஏறாவூரில் தான் நான் காண்கின்றேன்.

கட்டுமானங்களை திறக்க வேண்டும் என்ற ஆசைகள் இருந்தால் எதிர்காலத்தில் என்னால் கட்டி முடிக்கப்படுகின்ற கட்டுமானங்களை பதவியில் இல்லாத போதும் அவரால் வந்து திறந்து வைக்க முடியும். ஏனெனில் இவ்வாறு மோகம் பிடித்து திரிபவர்களுக்கு இப்படித்தான் செய்ய முடியும்.

என்னால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த வீதியை அவரும் வந்து ஆரம்பித்து வைக்கலாம். அதிகாரம் என்பது இறைவன் தருகின்ற சமாச்சாரம். இறைவன் விரும்பவில்லை என்றால் எங்களுக்கு அந்த அதிகாரம் கிடைக்கப்போவதில்லை. இவற்றை மறந்து யாரும் பேசி விடக் கூடாது.

அரசியலில் பக்குவப்பட்டு இருந்தால் மாத்திரம் தான் நல்ல அரசியல் தலைவர்களாக பெயர் சொல்ல முடியும். முன்னாள் கிழக்கு முதலமைச்சரின் பிழையான வழிகாட்டலினால் அதன் உறுப்பினர்கள் பதவி ஆசைக்காக 13வது திருத்தத்தில் அவர்கள் கேட்கின்ற அதிகாரத்தை கூட விட்டுக் கொடுப்பு செய்வதற்கு தயாராக இருந்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களுக்கு கூட சொல்லுகின்றேன். அவர்களும் சொல்லுவார்கள் 13வது திருத்தத்தையும், எங்களது அதிகாரங்களையும் சிங்கள அரசாங்கம் பறித்துக் கொள்கின்றது. இவர்கள் திட்டமிட்டுச் செய்கின்றார்கள் என்று கடந்த காலத்திலே தமிழ் அரசியல் தலைவர்கள் எமது மாவட்டத்திலும் வேறு பிரதேசங்களிலும் பெரும் கூச்சலிட்டார்கள்.

தங்களுடைய மாகாண சபை அதிகாரத்தை அரசாங்கம் பறித்துக் கொள்கின்றது என்று கூறியவர்கள். அவர்களுடைய பதவிகளை நீண்டிக் கொள்ள 20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிய வரலாறு இதனை கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் மறந்து விடக்கூடாது என்று நான் நினைக்கின்றேன்.

அரசியலில் எதனையும் அவசரப்பட்டு சாதிக்க முடியாது. அரசியலில் அனுபவம் இருக்க வேண்டும். அரசாங்கம் எப்படி நடக்கின்றது. அரசாங்க தலைவர்களின் எதிர்பார்ப்புக்கள் என்ன, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நிலைமை எவ்வாறு இருக்கின்றது. ஆட்சியின் தற்போதைய நிலவரம் என்ன என்பதை விளங்கிக் கொள்ளாத முன்னாள் முதலமைச்சர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் 20 திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியதன் மூலம் கிழக்கு மாகாணத்திலே உள்ள சிறுபான்மை மக்களுடைய இருப்புக்களை கேள்விக்குறியாக்கியவர்கள் என்றார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரின் நிதி ஓதுக்கீட்டின் மூலம் மாஞ்சோலை கிராமத்தில் அல் ஹிரா விளையாட்டு மைதானம் புனரமைப்பு, நைனா முஹம்மட் வீதி, குளத்துக்கான சுற்று வேலி, யூத் கழக வீதிக்கான புனரமைப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், செம்மண்னோடை கிராமத்தில் அல் ஹம்றா வீதியினை தார் வீதியாக புனரமைக்கும் வேலைத் திட்டங்களும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் எஸ்.லோகநாதன், உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.றுவைத், சாகுல் ஹமீட், மாஞ்சோலை வட்டாரக் குழுத் தலைவர் எஸ்.அலாவுத்தீன், வீதி அதிகார சபையின் பணிப்பாளர் எஸ்.தர்மரெட்ணம், பொறியிலாளர் எஸ்.தர்மராஜா, கணக்காளர் எஸ்.சுகையிர் மற்றும் கல்குடா தொகுதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Related Post