மலேசியா கல்வி அமைச்சரின் தலைமையில் 37 நாடுகளை சேர்ந்த பேராளர்களும் பங்கு பற்றுனர்களும் கலந்து கொண்டார்கள். அங்குரார்ப்பண வைபவத்தை தொடர்ந்து 20 நாடுகளை சார்ந்த கல்வி அமைச்சர்கள் மற்றும் பசுபிக் கல்வி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த அமைச்சர்கள் கலந்து கொண்ட வட்ட மேசை கலந்துரையாடலில் இலங்கை சார்பாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டமை ஒரு சிறப்பு அம்சமாகும்.
இக்கலந்துரையாடலில் கல்வியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர், தற்போது இலங்கையில் 13 வருட கட்டாய கல்வி அமுல்படுத்தும் நோக்கில் கல்வி மறுசீராக்கல் கொள்கைகளை தீட்டும் சந்தர்ப்பத்தில் இத்தகைய ஆரம்பக்கல்வி தொடர்பான மாநாட்டில் கலந்துக் கொள்ள கிடைத்ததும் மலேசிய கல்வி அமைச்சு சிறப்பாக நடத்துவதும் குறித்தும் மகிழ்ச்சியை தெரவித்துக் கொண்டார்.
இலங்கையில் தற்போது ஆரம்பக் கல்வியில் இணைந்துக் கொள்ளும் சிறார்களில் 90 வீதமானோர் ஏதாவது ஒரு வகையில் முன்பள்ளிக் கல்வியை பெற்றுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இவ்வாறு முன்பள்ளிகளை நடாத்தும் தனியார், அரச சார்பற்ற மற்றும் சமய சார்பான அமைப்புகள் குறித்தும் அவர்கள் தரமான முன்பள்ளிக் கல்வியை வழங்குகின்றார்களா என்பது குறித்து கண்காணிக்க வேண்டியுள்ளது. இவர்கள் ஆசிரியர்களை ஆட்சேர்க்கும் போது அவர்களின் தகுதி, அவர்களுக்கான பயிற்சி, தகுந்த வேதனம் வழங்குதல், பிள்ளைகளுக்கு போதுமான தளபாட மற்றும் உபகரண வசதிகளை வழங்குதல் தொடர்பில் அரச மட்டத்தில் அக்கறை எடுக்க வேண்டியுள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் தற்போது இலங்கையில் சிறுவர் அபிவிருத்தி மன்றம், மகளிர் விவகார அமைச்சு சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கையைக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கான கல்வி வழங்கும் அம்சத்தில் இலங்கை ஒரு தேசிய முன்பள்ளிக் கொள்கை தேவைப்படுகின்றது. இலங்கையில் இலவசமானதும் கட்டாயமானதுமான முன்பள்ளி வழங்கும் ஏற்பாடுகள் இல்லை. இதனால் எதிர்காலத்தில் மலேஷியா போன்ற நாடுகளில் முன்பள்ளி கல்வி வழங்கும் முறைக்கு ஏற்ப கல்வி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
மாநாட்டில் கலந்து கொள்ளும் முன் புத்ரா மலேஷியா பல்கலைக்கழகத்தின் முன்பள்ளி கல்வி சிறார் விருத்தி நிலைய ஆய்வு கூட மையத்தின் செயற்பாடுகளை நேரடியாக பார்வையிட்டு பல புதிய விடயங்களை அறிந்து கொண்டார். மாநாட்டின் முதல் நாள் நிறைவு வைபவத்தில் கலந்து கொண்ட மலேஷிய நாட்டு பிரதமருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.