“கடந்த காலங்களில் தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்துச் சென்று, பாராளுமன்றத்தினை அலங்கரித்தவர்கள், இன்று மீண்டும் உங்களிடம் வந்து வாக்களிக்குமாறு கேட்கின்றனர். இவர்களிடத்தில் தாங்கள் உழைத்த சொத்துக்களின் விபரங்களைக் கேளுங்கள்” என மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் மஹாலிங்கம் தயானந்தன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் 6 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் வேட்பாளரும் பிரதேச சபை தவிசாளருமான மஹாலிங்கம் தயானந்தன், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, வள்ளுவர்புரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,
கடந்த பல ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் அங்கம்வகித்த மாற்றுக்கட்சி பிரதிநிதிகள், எமது மக்களுக்காக எதைச் செய்துள்ளார்கள்? மக்கள் துன்பப்படும்போது ஓடி ஒளிந்துகொள்வார்கள். ஆனால், நாங்கள் அவ்வாறு அல்ல. வெள்ளத்தின் போது இங்கு வந்து நிவாரணங்களை வழங்கினோம். சமூர்த்தி கொடுப்பனவு தொடர்பில் பிரச்சினை வந்த போது, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு வந்து, மக்களுடன் நின்று, அதனை தீர்த்து வைத்தோம். அதுமாத்திரமின்றி, மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ஊடாக, இந்தப் பிரதேசத்துக்கு பல கோடி ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களைக் கொண்டுவந்தோம். எமது மக்களின் துன்பங்களை அறிந்தவர்கள் என்ற வகையில், நானும் முள்ளிவாய்க்கால் அவலங்களை சந்தித்தவன் என்ற ரீதியிலும் எமது மக்களுக்காகவே நாம் இவற்றையெல்லாம் செய்தோம்.
ஆனால், பாராளுமன்றத்தில் அங்கம்வகித்த எமது மாவட்ட மாற்றுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எதனை செய்துள்ளார்கள்? இன்று அவர்கள் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றார்கள். இது யாருடைய பணம்? மக்களுக்கு அவை செல்லாமல், தாங்களேஅனுபவித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை மீண்டும் பாராளுமன்றம் அனுப்பினால் என்ன நிலை ஏற்படும் என நீங்கள் அறிவீர்கள். இன்று சஜித் பிரேமதாஸவை பிரதமராக்க தமிழ் மக்கள் தாயராகி வருகின்றனர். தமிழ் மக்களது வாக்குகளை சிதறடிக்கும் வகையில், பல குழுக்கள் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளன. இவர்கள் இந்த மாவட்டத்தைச் சாராதவர்கள். மக்களின் வலிகளை அறியாதவர்கள். இவர்களது நோக்கம், வெற்றி பெறப்போகும் சஜித் பிரேமதாஸவின் வெற்றியினை, என்ன விலை கொடுத்தாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே.
எமது மக்கள் கடந்த தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை சஜித் பிரேமதாஸவுக்கு அளித்து, வரலாற்று பதிவை ஏற்படுத்தியுள்ளனர். இம்முறையும் அவர்கள் தொலைபேசி சின்னத்திற்கு வாக்களித்து, அந்த வெற்றியை உறுதிப்படுத்தவுள்ளனர். நான் பிரதேச சபையின் தவிசாளராக இருந்து, எமது பிரதேசத்துக்கு பாரிய அபிவிருத்திகளை கொண்டுவந்துள்ளேன். இதே போன்று, எமது மாவட்ட மக்களுக்கும் இதனை கொண்டுசெல்ல, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிடுகின்றேன்.
இந்த நாட்டில் வடபுல சமூகம் அளிக்கின்ற இந்த வாக்குகளின் மூலம், மீண்டும் ஜனநாயகம் உயிர்ப்பித்தெழும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இதனது பங்காளிகளாக நீங்களும் மாறுங்கள்” என்றார்.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இணைப்புச் செயலாளர் இர்சாத் றஹ்மத்துல்லா, சமூக சேவையாளர்களான குட்டி விஜயகுமார், யசோதரன் ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.