-நன்றி விடிவெள்ளி
கண்டி மாவட்டத்தில் பௌத்த இனவாதக் குழுக்கள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்புக்கு குந்தகமாக இருக்கிறது.
எனவே இதுபற்றி கூடிய கவனமெடுத்து இந்த இனவாதிகளின் செயற்பாடுகளை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த மாதத்திற்கான மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டத்தில் பாதுகாப்பு நிலைமைகளை விளக்கும் போதே இவர் இதனைத் தெரிவித்தார்.
மாவட்ட இணைப்புக்குழு கூட்டம் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் நடடைபெற்றது.
அங்கு விளக்கமளித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம்களுக்கு எதிரான மகஜர் ஒன்று தம்புள்ளையில் கைச்சாத்தாகிக் கொண்டிருக்கிறது.
அது தம்புள்ளை பள்ளிக்கு எதிரானதாகும். சில பிக்குமார் இதன் முன்னணியில் நிற்கின்றனர்.
தம்புள்ளையில் அமைக்கப்படவுள்ள பள்ளிவாசல் தேவையில்லை என இவர்கள் மக்களின் கையொப்பத்தைப் பெறுகின்றனர். எமது நாட்டின் அரசியல் யாப்பின்படி மதங்களைப் பின்பற்றும் சுதந்திரம் இருக்கிறது. அதற்கு முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் தேவை. இதை எதிர்க்க முடியாது.
இந்த நடவடிக்கைக்கு மல்வத்தை, அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் சம்பந்தமில்லை. தம்புள்ள விகாரை அதிபதியும் சம்பந்தமில்லை. எங்கோ இருந்து வரும் சில பிக்குகளே இதனைச் செய்கின்றார்கள்.
சில வாரங்களுக்கு முன் தவுலகலயில் முஸ்லிம் ஒருவர் அரசாங்கத்திடம் குத்தகைக்குப் பெற்றுள்ள காணியில் புத்தர் சிலையை வைத்துள்ளனர்.
இதுவும் பிக்குகள் தலைமையிலான ஒரு குழுவின் வேலை. அந்தக் காணியில் முஸ்லிம்கள் பள்ளிகட்டப் போகிறார்களாம். அதனாலேயே சிலையை வைத்தோம் என்கிறார்கள் இது குறித்து விசாரித்தால் அங்கு உள்ள பள்ளிக்கே சனம் போவது குறைவாக இருக்கிறதாம். எமக்கு புதிய பள்ளி எதற்கு இது பொய் என்று என்னிடம் கூறினார்.
இதற்கும் அங்குள்ள பிக்குவின் சம்பந்தம் இல்லை. எனவே இது பிரச்சினைகளை உண்டாக்க திட்டமிட்ட வேலை. அரசாங்கத்துக்கு எதிரான குழுவினரின் செயல்.
அண்மையில் கட்டுகஸ்தோட்டை பள்ளிவாசலுக்கு அருகில் இரண்டு புத்தர் சிலைகள் போடப்பட்டிருந்தன. ஒன்று உடைந்திருந்தது. இதை முஸ்லிம்களே செய்தனர் என்று காட்டி கலவரம் ஒன்றை ஏற்படுத்தக் கூடிய நிலை ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் நாம் விசாரித்த போது ஒரு பௌத்த வீட்டினரே இதை கொண்டுவந்து போட்டுள்ளனர். சிலையின் குறைபாடு காரணமாக இதை கொண்டு வந்து போட்டுள்ளனர். இதை விசாரித்த பின்னே உண்மை தெரிந்தது. விசாரிக்காது இருந்திருந்தால் பிரச்சினை வேறுவகையில் சென்றிருக்கும்.
தவுலகல காணியில் ஒரு சனசமூக நிலையத்தை கட்டி இரு தரப்பினரும் பாவிக்க சிங்கள, முஸ்லிம் மக்கள் தீர்மானித்துள்ளனர். இது ஒரு நல்ல தீர்மானமாகும்.
இதற்கு விரைவில் ஒரு முடிவுகட்ட வேண்டும். பொலிஸாருக்கும் நடவடிக்கை எடுக்கலாம். எமக்கும் முடியும். எம்மிடமும் கண்ணீர்ப்புகை, ஆயுதம் போன்றன உள்ளன. இவற்றைப் பாவிக்காது நல்ல முறையில் தீர்வு காணவே விரும்புகிறோம். எனவே முதலமைச்சர் இது பற்றி தீர்மானங்களை எடுப்பது நல்லது.
பௌத்தர்கள் மத்தியில் மட்டுமல்ல முஸ்லிம்கள் மத்தியிலும் பிளவுகள் உள்ளன. பள்ளிவாசல்களில் இரண்டு குழுக்கள் இயங்குகின்றன. இவை ஒன்றுக்கொன்று போட்டியாக உள்ளன. இதுபற்றிய தகவல்களும் எமக்குக் கிடைத்துள்ளன. இதுபற்றியும் முஸ்லிம் தலைமைகள் யோசிக்க வேண்டும்.
எவ்வாறெனினும் மௌலவிமார்கள் பொலிஸாருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றனர் என்றார்.
அத்துடன், பல்கலைக்கழக பகிடிவதை தொடர்பாகவும் சிலரை கைது செய்திருக்கிறோம். நீதிமன்றத் தில் இவர்கள் நிறுத்தப்படுவார்கள். இது தவிர கண்டியில் பாதுகாப்பு பிரச்சினைகள் இல்லை என்றார்.