முஸ்லிம்களின் உணவு தொடர்பில் கடந்த காலங்களில் சில தரப்பினர் விமர்சனங்களை ஏற்படுத்தினர். அதனை ஹலால் பிரச்சினையாகக் கொண்டு வந்தனர். எனினும் முஸ்லிம்களுக்கு ஹலால், ஹராம் என்கின்ற இரு விடயங்கள் உள்ளன.
ஹலாலானவற்றை உண்பதற்கே அவர்களுக்கு சமயத்தில் அனுமதியுண்டு. இஸ்லாம் சமயத்தின்படி மதுபானம் அருந்துவது ஹராமாக்கப்பட்டுள்ளது.
அதனால் அவர்கள் மதுபானம் பாவிப்பதில்லை. அது வரவேற்கத்தக்க விடயமாகும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
‘மதுசாரமற்ற இலங்கை’ எனும் தொனிப்பொருளிலான தேசிய மாநாடு நேற்று காலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முஸ்லிம்களில் மிகவும் சிறியளவிலான தொகையினரே மதுபானம் அருந்துகின்றனர். ஏனையவர்களைப் போல் அவர்களும் மதுபானம் அருந்துவார்களாயின் இலங்கை அப்பாவனையில் தற்போதுள்ளதை விட மோசமான நிலையினை அடைய வேண்டிவரும்.
எனது பிரதேச சனத் தொகையில் 31 சதவீதம் முஸ்லிம்கள் வசிக்கின்றர். அவர்களின் வீடுகளுக்கு நான் அடிக்கடி செல்கின்றேன். அவர்கள் உணவு பரிமாறும்போது ஒருபோதும் மதுபானம் பரிமாறியதில்லை. அதனையொட்டி நாம் சந்தேமாஷமடைய வேண்டும்.
மேலும் புகைத்தல் பாவனையினை தடுப்பதனை அடிப்படையாகக் கொண்டு புகையிலை கூட்டுத்தாபனங்களின் வரி 90சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.
அந்த வருமானத்தைக் கொண்டு சுகாதாரத்துறையிலுள்ள சகல வற் வரியினையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நானும் ஜனாதிபதியும் இணைந்து அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளோம்.
புகையிலை கூட்டுத் தாபனங்களுக்கான வரி அதிகரிப்பு தொடர்பில் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அக்கூட்டுத்தாபனங்கள் எனக்கு அழைப்பு விடுத்தன.
எனினும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தைகளை நிறைவுசெய்து விட்டார். நான் அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை மாத்திரம் உள்ளதாக அவர்களிடம் தெரிவித்தேன்.
புகையிலை கூட்டுத்தாபனங்களின் வரி அதிகரிப்பு தொடர்பில் எவருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை.
புகையிலைக்கான வரி அதிகரிப்பின் மூலம் கிடைக்ரும் வருமானத்தை விட புகைத்தல் பாவனையினால் பாதிக்கப்படுபவர்களின் சிகிச்சைக்கு அதிகளவான நிதியினை செலவிட வேண்டியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சி காலத்திலும் புகையிலைக் கூட்டுத்தாபனங்களின் வரி 90சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு முறையும் புகையிலைக்கான வரி அதிகரிக்கப்படும் போது புகைத்தல் பாவனை 4.5 சதவீதத்ததால் குறைவடைகிறது.
எனவே புகையிலைக்கூட்டுத் தாபனங்களின் வரி அதிகரிப்பு தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்தை எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து முன்வைக்கவுள்ளேன்.
மேலும் புகைத்தல் பாவனையினை தடுப்பதற்காக அவுஸ்திரேலியா ‘ப்லேங் பெகேஜ்’ எனும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் பெட்டிகளில் பெயர் மாத்திரம் பொறிக்க முடியும்.
அது தவிர வேறு கவர்ச்சி விடயங்கள் எதுவும் பொறிக்க முடியாது.
எனவே எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டங்களில் ‘ப்லேங் பெகேஜ்’ திட்டத்திற்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் சமர்ப்பிக்கவுள்ளேன்.
அத்துடன் 2020 ஆம் ஆண்டளவில் புகையிலை உற்பத்தியினை முழுமையாக தடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்பார்த்துள்ளார்.
எனவே எமது நாட்டில் புகைத்தல் மற்றும் மதுசாரத்திற்கு எதிராக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. புகைத்தல் மற்றும் மதுசார பாவனைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வருட அமர்வின் போது, புகைத்தல் மற்றும் மதுசாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் முன்னணி நாடுகள் 8 ஐக் குறிப்பிட்டனர்.
மேலும் நாம் எதிர்காலத்தில் அது தொடர்பில் மேற்கொள்ளவுள்ள திட்டங்களை முன்வைத்தபோது, அதனை நடைமுறைப்படுத்தினால் மதுசாரம் மற்றும் புகைத்தல் பாவனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை இலங்கை பெறும் எனக் குறிப்பிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். MC.Najimudeen