– A.R.A.பாரீல் –
இஸ்ரேல் பலஸ்தீன் மக்கள் மீது மேற்கொள்ளும் அட்டூழியங்களையும் அல் அக்ஸா பள்ளிவாசல் முற்றுகையையும் வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கை இஸ்ரேல் இராஜதந்திர உறவுகள் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்துமாயின் அதனை தான் விரும்பவில்லை எனவும் அவர் கூறினார்.
பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் இலங்கை இஸ்ரேல் உறவு தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
முஸ்லிம் நாடுகள் எப்போதும் இலங்கையுடன் நல்லுறவையே பேணிவந்துள்ளன. இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கடந்த காலத்தில் கொண்டு வரப்பட்ட பிரேரணையின் போது முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்தே வாக்களித்தன.
இலங்கை பலஸ்தீனர்களின் நட்பு நாடாகும். எனது ஆட்சிக் காலத்தில் பலஸ்தீன ஜனாதிபதி எமது நாட்டுக்கு நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டார். நானும் பலஸ்தீனத்துக்கு விஜயம் செய்துள்ளேன். இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் வலுப்பெற்றன.
பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத் தொடர்களில் நான் குரல் கொடுத்திருக்கிறேன். தொடர்ந்தும் பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பேன்.
பலஸ்தீன மக்களதும் முஸ்லிம்களதும் நண்பனான என்னை முஸ்லிம்களிலிருந்தும் சதி செய்து பிரித்தெடுத்தார்கள். காலப்போக்கில் உண்மை நிலையை உணர்ந்து முஸ்லிம்கள் மீண்டும் எம்முடன் இணைவார்கள்.
எமது நாடு பொருளாதார நெருக்கடிக்குள்ளான சந்தர்ப்பங்களில் முஸ்லிம் நாடுகள் எமக்கு வழங்கிய உதவிகளை மறக்க முடியாது என்றார்.