Breaking
Mon. Jan 13th, 2025

“முஸ்லிம்களின் அரசியல் பலத்தை ஒடுக்கி, அரசியல் அனாதைகளாக்கவும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்கவும் இன்று நாட்டில் திட்டமிட்ட சதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை அடியொற்றியே முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீது வெற்றுக் குற்றாச்சாட்டுக்களும் பழி சுமத்தல்களும் சுமத்தப்பட்டு நெருக்குதல்கள் தொடர்கின்றன”

இவ்வாறு, நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் விசனம் தெரிவித்தார்.

நிந்தவூர் பிரதேசசபைப் பிரிவுக்குட்பட்ட முன்பள்ளிப் பாடசாலை சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வுக்குத் தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் வடகிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரும், நிந்தவூர் சீ.ஓ.லெஸ்தகீர் சர்வதேச பாடசாலையின் பணிப்பாளருமான ஐ.எம்.இஸடீன் பிரதம அதிதியாகவும், கல்முனை கல்வி வலய முன்பள்ளிப் பாடசாலைகளுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.றசீன் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

நிந்தவூர் பிரதேச சபையின் முன்மாதிரி கல்வி அபிவிருத்தி சேவைத் திட்டத்தின்கீழ் மொத்தமாக 600 முன்பள்ளி மாணவர்களுக்கு சபை சார்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் தவிசாளர் தாஹிர் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லுறவு, நல்லிணக்கத்தை வளர்க்கும் நடுநிலைச் சமூகமாகவும், நாட்டை வளப்படுத்த ஒத்துழைக்கும் புரிந்துணர்வு கொண்ட சமூகமாகவுமே இருந்தது வருகின்றது.

ஆனால் இன்று சுய அரசியல் இலாபங்களுக்காகவும், பேரினவாத மதவாத வெறித்தனங்களுக்காகவும் முஸ்லிம் சமூகத்தை அடக்கி ஒடுக்கி, இருப்பைக் கேள்விக் குறியாக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுவருவது கவலைக்குரிய விடயமாகும்.

குறிப்பாக முஸ்லிம்களின் அரசியல் பலத்தை அடக்கவும், ஒடுக்கவும் திட்டமிட்ட சதிகள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நாட்டை வளப்படுத்தவும், சகல சமூகங்களுக்கிடையிலும் புரிந்துணர்வுகளுடன் கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் பாடுபட்ட முஸ்லிம் சமூகம் இன்று நசுக்கப்படும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது.

இன்று குறிப்பாக பேரின வாதமும், மதவாதமும், முஸ்லிம் சமூகத்திற்காகக் குரல் கொடுத்துவந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளின் குரல்வளையை நசுக்க முற்பட்டுள்ளது,

இதனடிப்படையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூடிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற நிலையில் எதிர்காலத்தில் முஜிபுர் ரஹ்மான், ரவூப் ஹக்கீம், ஹிஸ்புல்லா பேன்ற எமது அரசியல் தலைமைகளும் திட்டமிட்ட நெருக்கடிகளுக்கு உள்ளாகலாமென்ற அச்சமுண்டு.

முஸ்லிம்களின் அரசயில் பலத்தை ஒடுக்கவும், அரசயிலிலிருந்து சமூகத்தை ஒதுக்கவும் எடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகளை முறியடித்து சமூகம் தலை நிமிர்ந்து வாழ எம்மிடையே நிரந்தர செயற்பாடுகள் அசியமாகும்.

இதற்கு வாய்மூடி மௌனிகளாக இருக்காத, சமூகத்திற்காகக் குரல் கொடுத்துச் செயற்படத்தக்க அரசியல் தமைகைளைத் தக்க வைக்கவும், எதிர்காலத்திலும் உருவாக்கவும் நாம் பாடுபட வேண்டும்.

நாட்டில் முஸ்லிம்களுகுச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகளில் தீப்பரவல் ஏற்பட்டால் அது மின் ஒழுக்கால் ஏற்பட்டது எனவும், பெரும்பான்மையினத்தவர் உடமைகளுக்கு ஏற்பட்டால் அது பயங்கரவாத செயலால் ஏற்பட்டது எனவும் முத்திரை பதிக்கும் நிலை இன்று நாட்டில் உள்ளது.

பௌத்த துறவியான பொதுபல சேனவின் ஞானசார தேரர் கடந்த சில மாதங்கள் மௌனம் காத்த பின்னர் மீண்டும் தனது பேரினவாத, மாதவாதக் குரலை எழுப்பத் தொடங்கியிருக்கிறார்.

பௌத்த சிங்கள மக்கள் தனிச்சிங்களத் தலைவரைத் தெரிவு செய்ததைப் போன்று எதிர்வரும் பொதுத்தேர்தலுடன் தனிச் சிங்கள அரசாங்கத்தையும் தோற்றுவிக்க வேண்டுமென அவர் குரல் கொடுத்துள்ளார்.

நாட்டின் இறையாண்மையை நல்லிணக்கத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையிலமைந்த தேரரின் இக்கூற்று விசனத்திற்குரியதும், கண்டிக்கத்தக்கதுமாகும்.

இவ்வாறு நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பில் முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி சிறுபான்மை சமூகங்கள் மிகவும் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

நமது உரிமைகள், மத சுதந்திரம், இருப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என்றார்.

பிரதேச சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எல்.றியாஸ் ஆதம், ஏ.அஸ்பர், ஜெஸீமா சஹீல், உட்பட பலர் நிகழ்வில் உரையாற்றினர்

(ஏ.எல்.எம்.சலீம்-வீரகேசரி/2020.02.18)

Related Post