Breaking
Mon. Dec 23rd, 2024

முஸ்லிம் தலைமைகளின் இலட்சியம் தவறிய பயணம் முஸ்லிம் பிரதேசங்கள், கிராமங்களிடையே பிரதேசவாத சிந்தனைகளைப் பலப்படுத்தியுள்ளதால் கட்சித் தலைமைகள் பெரும் தலையிடியை எதிர்நோக்கியுள்ளன. தேர்தல் முடிந்த கையோடு தேசியப் பட்டியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளமையிலிருந்து இதனைப் புரிந்துகொள்ளலாம். முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை மு.காவுக்கு முன் (1986) மு.காவுக்குப் பின் என இரண்டாகக் கருதமுடியும்.

மு. கா. வுக்கு முன் (1986) வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முஸ்லிம் கிராமங்கள் ஊர், ஊராகப் பிளந்து வேறுபட்டுக்கிடந்தன. இப்பிரதேச முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில் ஊருக்கு ஒரு எம்.பி. என்ற கோஷங்களே முன்வைக்கப்பட்டன. அதிக சனத்தொகை, பண பலம், கல்வி, குடும்ப ஆதிக்கம் நிறைந்த ஊர்கள் எம்.பியைப் பெற முயன்று ஒவ்வொரு தேர்தல்களிலும் எம்.பி.யைப் பெற்றன. கிழக்கில் கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர் போன்ற பிரசேதங்கள் இவ்வாறு நீண்ட காலம் ஊரின் எம்.பி.யை தக்கவைத்துக் கொண்டன. முன்னாள் அமைச்சர்களான ஏ. ஆர். எம். மன்சூர், பி. ஏ. மஜீத், முஸ்தபா ஆகியோர் இவ்வூர்களின் மன்னர்களாகவும், கதாநாயகர்களாகவும் திகழ்ந்தனர்.

1986 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் உதயமானதுடன் தொகுதி வாரி தேர்தல் வழக்கொழிந்து விகிதாசார தேர்தல் முறை அறிமுகமானது. மு.காவின் முதலாவது தேர்தல் களம் விகிதாசார முறையாக இருந்தது. எனவே இத்தேர்தல் முறையைக் கச்சிதமாக பயன்படுத்திய முஸ்லிம் காங்கிரஸ் விகிதாசார முறையைப் பயன்படுத்தி பிரதேசவாத சிந்தனைகளை ஒழிக்கவும் முஸ்லிம்களை சமூக ரீதியில் ஒன்றிணைக்கவும் பிரசாரங்களை முன்னெடுத்து வெற்றியும் கண்டது. 1986 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவிய அரசியல், இராணுவப் பின் புலங்களும் முஸ்லிம்களை முஸ்லிம் காங்கிரஸின் பக்கம் அணிதிரட்ட உதவியது.

வடக்கு, கிழக்கில் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தினூடாக தீர்வு கிடைக்கும் போது முஸ்லிம்க ளுக்கும் தீர்வைப் பெற்றுத் தருவோமென்று முஸ்லிம்களை விழித்தெழச் செய்த மு.காவின் ஸ்தாபகத் தலைவர் மற்றும் தவிசாளர்களான அஷ்ரஃப், ஷேகு இஸ்ஸதீன் ஆகியோரின் பிரசாரங்கள் முஸ்லிம் ஊர்களுக்கிடையேயிருந்த பிரதேசவாத சிந்தனைகளை அடியோடு இல்லாமற் செய்தன.

பிரதேசவாதத்தை ஒழிப்பதற்கு மத உணர்வுகள். அறிவுரைகள் புனித குர்ஆன் கூறும் ஒற்றுமை பற்றிய அறிவுரைகளும் மு. கா. மேடையில் முழங்கப்பட்டது. இந்நிலைமை மு.காங்கிரஸில் எங்காவது எம்.பி கிடைத்தால் போதும் என்ற மனநிலையையும் சமூக உணர்வையுமே முஸ்லிம்களிடத்தில் வளர்த்ததுடன் கல்முனை, காத்தான்குடி, அக்கரைப்பற்று, அளுத்கமை, அட்டாளைச்சேனை, ஓட்டமாவடி என்ற பிரதேச வாதங்களையும் இல்லாமற் செய்து. இதனால் அப்போதைய நிலைமையில் (1986 – 1994) வரை முஸ்லிம் காங்கிரஸஸூக்கு தேசியப்ப ட்டியல் ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. இதனால்தான் 1989 ஆம் ஆண்டு கொழும்பைச் சேர்ந்த புஹார்தீன் ஹாஜியாருக்கு தேசியப் பட்டியல் வழங்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு அஸித பெரேரா என்ற சிங்கள சகோதரருக்கும் மு. கா. தேசியப் பட்டயலை வழங்கியது.

இந்நேரங்களில் எவ்வித பிரச்சினைகளும் மு. காங்கிரஸூக்குள்ளோ. முஸ்லிம் கிராமங்களிலோ ஏற்படவில்லை. ஸ¤ஹைர், இல்யாஸ் ஆகியோருக்கும் மு.கா. தேசியப் பட்டியலை வழங்கி சமூகத்துக்கான இருப்பையும் போராட்ட குணாம்சங்களையும் வளர்த்தெடுத்தது என்பதே உண்மை. ஆனால் 2000 ஆண்டுக்குப் பின்னர் மு.கா. உடைந்து சிதறி பல முஸ்லிம் கட்சிகள் உயிர் வாழ்ந்தாலும் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுடன் மு.காவும்.

ம. கா.வுமே முஸ்லிம் சமூகத்துக்கான கட்சிகளாக எஞ்சி நிற்கின்றன. இவ்விரண்டு முஸ்லிம் தலைமைகளும் வாக்காளர்களை கவர்ந்திழுக்க பிரதேசவாதம், தேசியப் பட்டியல் என்பதையே மந்திரிக்குமளவுக்கு வந்துள்ளன. இதற்கான காரணங்களை மிக ஆழமமாக ஆராய வேண்டியுள்ளது. ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு முன்னர் இதற்குரிய முதலாவது விடையும் கையில் கிடைத்துள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்புக்கான பிரச்சினை, தீர்வுகள் குறித்து மு. கா., ம. கா. தலைமைகளிடம் தெளிவான சிந்தனையில்லை. இணைந்த வட கிழக்கிலா முஸ்லிம்களுக்கு தீர்வு அல்லது கிழக்கைப் பிரிப்பதிலா முஸ்லிம்களுக்கு அரசியல் பலம் என்பதை இவ்விரு தலைமைகளும் தெளிவாகச் சொல்லவில்லை.

தெரியாததால் சொல்லவில்லையா சொன்னால் பிரச்சினை என்று மறைக்கின்றார்களா? அதுவும் முஸ்லிம்களுக்குப் புரியவில்லை. இப்பிரச்சினைகளையும். தீர்வுகளையும் வெளிப்படையாக ம. கா.வும், மு. கா.வும் முன்வைத்திருந்தால் ஒவ்வொரு ஊருக்கும் சென்று தேசியப் பட்டியல் தருவதாக சொல்லி வாக்கு கேட்க வேண்டிய தேவை வந்திருக்காது. முஸ்லிம் மாகாணத்துக்காக அல்லது கரையோர மாவட்டத்துக்காக இல்லாவிட்டால் தமிழ் பேசும் சமூகங்களின் ஒன்றிணைந்த நிலபுல எல்லைக்காக வாக்களிக்குமாறு கோரலாம். செலவில்லாமல் தேர்தலில் போட்டியிடும் வழிகள் பல இருக்கையில் கோடிக் கணக்கில் பணம் செலவிட்டு ஊர், ஊராய் தேசியப் பட்டியலுக்கு வாக்குறுதியளித்து வாக்குக் கேட்கும் நிலைமைகள் ஏன் வந்துள்ளன?

முஸ்லிம்களின் தேசியம், சமூகம் சார்ந்த சிந்தனைகளை வளர்க்கவும் பாதுகாக்கவும் தவறியமையால் வந்த வினை விபரீதங்களே இவை. காலப் போக்கில் சர்வதேச தலையீடுகளின் அனுசரணையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள சிறுபான்மை சமூகங்களுக்கு தீர்வுகள் முன்வைக்கப்படும் போது முஸ்லிம்கள் குறித்து எதை முன்வைப்பது. மு. காங்கிரஸில் செயலாளராகவுள்ள ஹஸன் அலியும், அ. இ. ம. காங்கிரஸோடு நெருக்கமாகவுள்ள ஷேகு இஸ்ஸதீனுமே அஷ்ரஃப்போடு பணியாற்றிய இன்றுள்ள மு.கா.வின் ஸ்தாபக சிந்தனையாளர்கள்.

முஸ்லிம்கள் சார்பான உண்மையான அரசியல் தேவைகள் அதற்கான நிலை யான தீர்வுகளை சர்வதேச மேசையில் முன்வைக்க தமிழர் தரப்பு இதய சுத்தியோடு தான் செயற்படுகிறது. இதனால் மு.கா. மகா தீர்வுகளை முன்வைக்காவிட்டாலும் ஷேகு இஸ்ஸதீன், ஹஸன் அலி ஆகியோரைச் சந்தித்து முஸ்லிம் யோசனைகளை முன்வைக்குமாறு தமிழர் தரப்பு கோரவுள்ளது. நேற்று வியாழக்கிழமை (27) மதீனாபுரம் வந்து ஷேகு இஸ்ஸதீனை சந்திப்பதற்கு தமிழர் தரப்பு உயர்மட்டம் முயன்றதாக செய்திகள் கசிந்துள்ள போதும் சந்திப்பு இடம்பெற்றதா என்பது ஊர்ஜிதமாகவில்லை.

ஹஸன் அலி, ஷேகு இஸ்ஸதீன் ஆகியோரை மையப்படுத்தி அரசியல் சாராத முஸ்லிம் தேசியவாதிகள் அமைப்பை உருவாக்கி முஸ்லிம் தலைமைகளுக்கு (ம. கா., மு. கா.) ஆலேசானை வழங்கவும் முயற்சிக்கப்படுகின்றன. இதில் பஷீர் ஷேகுதாவூத், யு. எல். எம். மொஹிதீன் போன்ற முஸ்லிம் சிந்தனையாளர்கள் எழுத்தாளர்களையும் உள்வாங்க முயற்சிக்கப்படுகின்றன. தேசியப் பட்டியல், அரசியல் அதிகாரங்கள் கோரி சிதறிக்கிடக்கும் முஸ்லிம் கிராமங்கள், ஊர்களை தேசிய, சமூகவாத சிந்தனை. கருத்துக்களில் ஒன்றிணைப்பதே இந்த முஸ்லிம் தேசியவாதிகள் அமைப்பின் பணியாம்.

காலத்தின் தேவை கருதி இவ்வாறான அமைப்பின் தேவை உணரப்பட்டுள்ளன. முஸ்லிம் புத்திஜீவிகள் இதனை வரவேற்கின்றனர். இரண்டு முஸ்லிம் தலைமைகளையும் (மு. கா., ம. கா.) வழிப்படுத்துவதுடன் மாத்திரம் நின்றுவிடாமல் இனப்பிரச்சினை தீர்வு மேசையில் இந்த முஸ்லிம் தேசிய வாதிகளின் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட வேண்டுமென முஸ்லிம் பூத்திஜீவிகள் விரும்புகின்றனர்.

Related Post