மஹிந்த ராஜபக் ஷ யுத்தத்தை வெற்றி கொண்டதன் மூலம் 96 வீதமான நன்மைகளை வடக்கு தமிழ் மக்களே பெற்றுக் கொண்டார்கள். ஆனால் தமிழ் மக்களை மஹிந்த ராஜபக் ஷவினால் வெற்றி கொள்ள முடியாமற் போனது.
வெறுமனே நாம் முஸ்லிம் மக்களின் எதிர்ப்பினைத் தேடிக் கொண்டோம். இதற்கு மஹிந்தவும் அவரது குடும்பமுமே காரணம் என கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் எஸ்.பி .திசாநாயக்க தெரிவித்தார்.
அமைச்சர் திசாநாயக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றிலே இவ்வாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவித்திருப்பதாவது.
மஹிந்த ராஜபக் ஷவை மக்கள் ஆதரிப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. என்னவென்றாலும் நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாத்தவர் மீட்டெடுத்தவர் அவர். அந்த நன்றிக்கடன் மக்களிடமிருக்கிறது.
அந்த நன்றிக்கடன் எனக்குமிருக்கிறது. ஊழல்கள் இருந்தாலும் பல பிரச்சினைகள் நிலவியபோதும் அவற்றின் மத்தியில் இந்நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய அபிவிருத்தியை அவர் மேற்கொண்டார்.
மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் வெளியிட்டுள்ள 2015ஆம் ஆண்டின் மத்திய வங்கியின் அறிக்கையில் 2014ஆம் ஆண்டு மிகவும் சிறந்த அபிவிருத்தியைக் கண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை பி.பீ.ஜயசுந்தரவோ அஜித் நிவாஸ் கப்ராலோ வெளியிடவில்லையே. இந்த அறிக்கையை அர்ஜுன மகேந்திரனே வெளியிட்டுள்ளார்.
எவ்வகையான சர்வதேச பிரச்சினைகளையும் எதிர்கொள்ள தனக்குப் பலம் இருக்கிறது என்பதை மஹிந்த நிரூபித்து பொருளாதாரத்தை அபிவிருத்தியடையச் செய்தார். இன்று வடக்கில் பாடசாலை மாணவர்கள் காட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவதில்லை. வீடுகளிலிருந்து கடத்திச் செல்லப்படுவதில்லை. கப்பம் வாங்கப்படுவதில்லை.
30வருட கால யுத்தத்தின் சாபத்திலிருந்து மஹிந்த எம்மைப்பாதுகாத்தது போல் சர்வதேச அழுத்தங்களிலிருந்தும் ஆபத்திலிருந்தும் மைத்திரிபால சிறிசேன எம்மைப் பாதுகாத்ததாகவே நான் கருதுகிறேன்.
இன்று எமது பக்கம் இந்தியா இருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் எம்முடன் உள்ளன. அமெரிக்கா எம்முடன் உள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு எம்முடன் உள்ளது.
அதனால் எதிர்வரும் தேர்தலை வெற்றி கொள்ள மஹிந்த போட்டியிடத் தேவையில்லை என்றார்.