– ஏ.எச்.எம்.பூமுதீன் –
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அ.இ.ம.கா தேசியத் தலைவர் அமைச்சருமான ரிசாத் பதியுதீனுக்குமிடையில் நாளை விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலேயே இந்த விசேட சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நாளை புதன் கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு இச்சந்திப்பு நடைபெறவுள்ளது.
கடந்த புதன் கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் மிகவும் அசமந்தமான போக்கை அரசு கடைப்பிடித்து வருவதாக கண்டித்து மிகவும் ஆக்ரோசமான முறையில் அமைச்சர் கருத்து வெளிப்படுத்தியிருந்தார்.
இதனையடுத்தே இந்த விசேட சந்திப்பு ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க ஏற்பாடாகியுள்ளது.
நாளைய சந்திப்பின் போது அமைச்சர் ரிசாத் தலைமையில் முக்கிய அதிகாரிகள் பங்கு கொள்ளவுள்ளனர். அத்துடன் மீள்குடியேற்ற அமைச்சர் உட்பட முக்கிய அதிகாரிகளுக்கும் இச்சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதியால் கட்டாய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண முஸ்லிம்கள் மற்றும் மீள் குடியேற்றம் குறித்த உண்மைத் தரவுகள் பெறப்பட்டு ரிசாத் பதியுதீனின் விசேட ஏற்பாட்டில் பெறப்பட்டு வருகின்றன.
இந்த தரவுகள் மீள்குடியேற்ற அமைச்சு உட்பட முக்கிய இடங்களில் மழுங்கடிப்பு செய்யபப்பட்டு வருவதாக ரிசாத் பதியுதீன் கடந்த அமைச்சரவையின் போது குற்றம் சுமத்தியிருந்தார்.
இது தொடர்பிலும் நாளைய சந்திப்பின் போதும் உரிய அதிகாரிகளிடம் ஜனாதிபதி விளக்கம் கோரவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
வடமாகாண முஸ்லிம்களின் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு முகா ஏற்பாடு செய்திருந்த நினைவுக் கூட்டம் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் 2000 முஸ்லிம் குடும்பங்கள் மாத்திரமே இன்னும் குடியேறவுள்ளனர் என பிழையான தரவுகளை சுட்டிக் காட்டி உண்மைப் படுத்த முனைந்த போது அந்த இடத்தில் அமர்ந்திந்த ரவூப் ஹக்கீமோ அல்லது முகா சார்பான பிரமுகர்களோ எவருமே சுவாமிநாதனின் கருத்தை மறுதலிக்கவில்லை.
இதற்கு காரணம் வடமாகாண முஸ்லிம்கள் தொடர்பான எந்த தரவுகளும் அல்லது ஆயத்தங்களும் அவர்களிடம் இல்லாமை போனதே.
இவ்வாறான பின்னணியில் தான் ரிசாத் பதியுதீன் கடந்த அமைச்சரவையின் போது இவர் கொதித்தெழுந்து தனது வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் உண்மையான அக்கரையுடன் செயற்படுபவர் ரிசாத் பதியுதீன்தான் என்பதை ஜனாதிபதியும் அமைச்சரவையும் தெளிவாக உணர்ந்ததன் பிற்பாடே இந்த விசேட சந்திப்புக்காக ஜனாதிபதியால் ரிசாத் பதியுதீன் அழைக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஊடக அறிக்கை வெளியிட்டோ ,பொதுக் கூட்டங்களில் வீரப்பேச்சு பேசியோ, மக்களை ஏமாற்ற விரும்பாத ரிசாத் பதியுதீன் நாட்டின் தலைவரிடமே நேரடியாக தனது மக்களின் தேவைகளை ஆவேசமாக சுட்டிக் காட்டி அதற்கு தீர்வு காணும் பொறிமுறையை கடைப்பிடித்து வருகின்றார்.
இதற்கு எடுத்துக் காட்டாக அளுத்கமை பற்றி எரிந்த போது அப்போதிருந்த ஜனாபதிபதி மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில் – இது போன்ற அமைச்சரவை கூட்டம் ஒன்றின் போது மகிந்தவை நோக்கி கைநீட்டி கடும் சொற்களை பிரயோகித்து அளுத்கம மக்களுக்கு குரல் கொடுத்தமையும் இதனால் கோபமுற்ற மகிந்த தான் அமர்ந்திருந்த கதிரையை தூக்கி ரிசாத் மீது எறிய முற்பட்டமையும் இந்த நாட்டு முஸ்லிம்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள்.