கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதன் மூலம், அவர்களின் அடிப்படை உரிமை மீறப்படுகின்றது என்ற தீர்ப்பை வழங்குமாறு கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட 12 முஸ்லிம் அமைப்புக்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, யசந்த கோதாகொட ஆகியோர் உள்ளடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு நேற்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட 12 முஸ்லிம் அமைப்புகள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளன.
கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்ய உத்தரவிட்டு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கடந்த ஏப்ரல் மாதம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டதாக, மனுதாரர்கள் குறித்த மனுவின் ஊடாக தெரிவித்துள்ளனர்.
இதனால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இது முஸ்லிம்களின் கலாச்சார மற்றும் வழக்கமான நடைமுறைகளுக்கு எதிரானது என்பதை மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யப்பட வேண்டும் என சுகாதார தரப்பினர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்கி, அவர்களால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் முஸ்லிம்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாக தீர்ப்பொன்றை வழங்குமாறு, மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.
(அத தெரண)