Breaking
Mon. Dec 23rd, 2024

-சுஐப் எம். காசிம்-

எந்தவிதமான குற்றமுமிழைக்காமல் துரத்தப்பட்ட வடபுல அகதி முஸ்லிம்கள் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முட்டுக் கட்டையாக இருக்கக் கூடாது என அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடபுல முஸ்லிம்கள் தமது பரம்பரைப் பூமியிலிருந்து விரட்டப்பட்டு 25 ஆண்டுகள் கழிந்து விட்டன. இன்னுமே அகதி முகாம்களில் அல்லல்பட்டு வாழும் இந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எந்த அரசும் உருப்படியான திட்டங்களை வகுக்கவில்லை. சர்வதேசமோ, ஜெனீவாவோ, ஐ.நாவோ இந்த மக்கள் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. இறுதி யுத்தத்தில் தமிழினத்துக்கு நேர்ந்த அவலங்களை எடுத்துக் கூறி சர்வதேசத்திடமும் இலங்கை அரசிடமும் நியாயம் கேட்டு வரும் தமிழ்க் கூட்டமைப்பு, ஒரே மொழி பேசும் தம்முடன் இணைந்து வாழ்ந்த சகோதர இனத்துக்கு நடந்த அநியாயங்கள் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை.

முஸ்லிம்கள் மீண்டும் தமது சொந்த இடத் துக்கு திரும்ப வேண்டுமென்ற மனப்போக்கையும் கூட்டமைப்பு கொண்டிருக்கவில்லை. மாறாக அந்தக் கட்சியின் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் மீளக்குடியேற வடமாகாணத்துக்கு வரும் அகதி முஸ்லிம்களை தென்னிலங்கைக்கு மீண்டும் விரட்ட வேண்டுமென்பதில் குறியாக உள்ளனர். கூட்டமைப்பினருக்கு மனச்சாட்சி என்று ஒன்றிருந்தால் இவ்வாறான இழிவான காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அறிக்கைகளிலும் வாய்ப்பேச்சிலும் தமிழ் – முஸ்லிம் உறவு பற்றியும், பரஸ்பர ஒற்றுமை பற்றியும் இனிப்பாகப் பேசிவரும் கூட்டமைப் பின் முக்கியஸ்தர்கள் இந்த விடயத்தில் உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்தையோ அவர்களின் நல்வாழ்க்கையையோ நாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை. அவர்களுடன் சகோதரர்களாகவே வாழ விரும்புகின்றோம். பிட்டும் தேங்காய்ப்பூவும் போல நாம் இருக்கின்றோம் என்று கூறிக் கூறிக் கொண்டிராமல் நடைமுறையில் கூட்டமைப்பு அதைக் காட்ட வேண்டும்.

புலிகளால் விரட்டப்பட்டு அகதியாக வந்த நான், இறைவனின் நாட்டத்தால் அமைச்சராகினேன். இறுதிப் போரில் பாதிக்கப்பட்டு உடுத்த உடையுடன் ஓடோடி வந்த தமிழ்ச் சகோதரர்களை ஓமந்தையில் அரவணைத்து அவர்களுக்கு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தேன்.

அகதிகளாகிய அந்த மக்களை அரசாங்கத்தின் கொள்கைக் கிணங்க படிப்படியாகக் குடியேற்ற பாடுபட் டேன். ஆனால் இற்றைவரை எமது மக்களின் குடியேற்றம் தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வட மாகாண சபை எந்தக் கவனமும் செலுத்தாமை துரதிஷ்டமே. சம்பந்தன் ஐயா, எதிர்க்கட்சித்தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டமையை நான் உட்பட எமது சமூகத் தலைவர்கள், முஸ்லிம் மக்கள் மனதார வரவேற்றோம். எனினும் தமிழ்ச் சமூகத் தலைவர்கள் எம்மை ஓரக்கண்கொண்டு பார்க்கின்றனர்.

எனவே மாவை, சம்பந்தன் ஐயா, சுமந்திரன் போன்ற தலைவர்கள் தமது கட்சியில் அங்கம் வகிக்கும் இனவாத எண்ணம் கொண்டவர்களை எமக்கு எதிராகவும், முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு எதிராகவும் செயற்பட இடமளிக்க வேண்டாம் என வேண்டுகின்றோம்.

எம்மை ‘வந்தான் வரத்தான்’களாகப் பார்க்காமல் உங்கள் சகோதரர்களாக நினையுங்கள் என மிகவும் உருக்கமாக வேண்டுகின்றோம்.

By

Related Post