Breaking
Mon. Jan 13th, 2025

நாம் ஒரு ஆபத்தான நிலையை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றோம். தேர்தல் நிறைவுற்றதும் அரசியலமைப்பு மாற்றம் உட்பட பல்வேறு ஆபத்துக்களை முகம் கொடுக்க தயாராக வேண்டும். இவற்றை முகம் கொடுக்க பாராளுமன்ற பலம் மிகவும் அவசியமானது. இன்றைய கள நிலவரங்களை வைத்து அவதானிக்கும் போது முன்னரை விட குறைவான பாராளுமன்ற பலமே முஸ்லிம்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

கடந்த பாராளுமன்றத்தில் 21 முஸ்லிம் பா.உறுப்பினர்கள் இருந்திருந்தார்கள். இதில் ஆறு பேர் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் நுழைந்திருந்தனர். இம் முறை முஸ்லிம் கட்சிகளான மு.கா, அ.இ.ம.கா ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தேசியப்பட்டியலே ஐ.ம.சக்தியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அப்பால் மொட்டு அணியினரிடமிருந்து ஒரு ஆசனம் அலி சப்றிக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காது போகலாம். கடந்த முறையை விட இம் முறை அரைவாசி எண்ணிக்கையான தேசியப்பட்டியல் குறையும்.

இம் முறை ஐ.தே.கவிலிருந்து சஜித் அணியினர் பிரிந்துள்ளதால் கடந்த முறை அநுராதபுரத்திலிருந்து வந்த முஸ்லிம் ஆசனம் பெரும் சவாலுக்குள்ளாகியுள்ளது. கண்டி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் தலா ஒரு முஸ்லிம் ஆசனம் கேள்விக்குறியாகியுள்ளது. இவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியமுள்ளது.

நாம் ஒற்றுமையாக இருந்தால் புத்தளத்தில் மிக இலகுவாக எமது ஆசனத்தை உறுதி செய்யலாம். முழு மூச்சோடு செயற்பட்டால் குருநாகலிலும் ஆசனத்தை உறுதி செய்யலாம். கம்பஹாவிலே முயற்சித்து பார்க்கலாம். அம்பாறையில் ஆசனங்களை அதிகரிக்க முடியும். நான் இங்கு சொல்லும் விடயங்களை விமர்சனப் பார்வையில் நோக்க வேண்டாம். உடன்பாட்டு அடிப்படையில் நோக்குங்கள்.

எமது ஆசனங்களை அதிகரிப்பதற்கான மிக முக்கியமான நகர்வாக வாக்களிப்பு வீதத்தை அதிகரிப்பதை குறிப்பிடலாம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள், தங்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்பதை ராஜபக்ஸ அணியினர் நன்கே அறிந்திருந்தனர். அவர்கள் வாக்கெடுக்க சாத்தியமற்ற தமிழ் பேசும் மக்களிடம் வாக்கெடுப்பதற்கு சிந்திக்காது, அவர்களின் பிரதான நகர்வாக சிங்கள மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிப்பதே இருந்தது. அது கடந்த முறை அவர்களுக்கு பாரிய வெற்றியை சுவைக்க காரணமான நகர்வுகளில் ஒன்றும் கூட.

இந்த நகர்வை இம் முறை நாம் செயற்படுத்தியேயாக வேண்டும். இந் நகர்வு எமக்கு வெற்றியளிக்குமாக இருந்தால் கடந்த முறை நாம் பெற்ற பா.உறுப்பினர் எண்ணிக்கையை, இம் முறை தக்க வைத்துக்கொள்ள முடியும். இதற்கு முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகள் முன்வந்தேயாக வேண்டும். ஜும்மா மேடைகள் பயன்பட்டேயாக வேண்டும். அல்லாது போனால் எதிர்வரும் காலத்தில் முஸ்லிம் சமூகம் மிகப் பெரும் விலை கொடுக்க நேரிடும். நாம் எதிர்கொண்டுள்ள ஆபத்தை உணர்ந்து அ.இ.ஜ.உலமா எக் கட்சியையும் ஆதரிக்காத விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும். கடந்த முறை பௌத்த மதகுருக்களின் ஈடுபாடே மொட்டு அணியினரின் வெற்றிக்கு பெரும் பங்களித்திருந்தது என்ற விடயம் இங்கு சுட்டிகாட்டத்தக்கது.

நாம் மிகைத்த பாராளுமன்ற பலத்தில் இருந்த போதே எம்மை தூக்கி மிதித்தவர்கள், நாம் பலமின்றி காணப்பட்டால் என்ன செய்வார்கள்? எம் எதிர்கால ஆபத்தை உணர்ந்து விழிப்படைவோம்…

 

ஏ.கே. மிஸ்பாஹுல் ஹக்

Related Post