பண்டாரநாயக்கவின் கொள்கைகளின் அடிப்படையில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தற்போது மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பியின் அரசியல் சபை உறுப்பினரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முழுமையான வாக்குகள் மகிந்த ராஜபக்சவுக்கு கிடைக்க போவதில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒரு பகுதியினர் பிரிந்து சென்று விட்டனர். அந்த கட்சியில் இருக்கும் சிலருக்கு வாக்குரிமை கூட இல்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல வாக்குகளும் கிடைக்கும் என எண்ணினால் மகிந்த வெற்றிபெற மாட்டார். அந்த கட்சியின் வாக்குகள் பிரிந்து விட்டன.
விமல் வீரவன்ஸவுக்கும் வாக்குகள் இல்லை. டியூ. குணசேகர, மகிந்த ராஜபக்சவின் புண்ணியத்தில் கிடைத்த தேசிய பட்டியல் நாடாளுமன்ற பதவி பெற்றார். லங்கா சமசமாஜக் கட்சியின் திஸ்ஸ விதாரணவும் தேசிய பட்டியல் மூலமே நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
தினேஷ் குணவர்தனவை எடுத்துக்கொண்டால், எந்த விதத்திலும் தேசிய ரீதியில் அவருக்கு வாக்கு வங்கி என்பது இல்லை. மகரகம தொகுதி ஒரு காலத்தில் அவருக்கு வாக்கு வங்கி இருந்தது. வாசுதேவ நாணயக்கார பற்றி பேசி பிரயோசனமில்லை.
முஸ்லிம் மக்களின் வாக்குகளும் மகிந்த ராஜபக்சவுக்கு கிடைக்காது. மேல்,தென் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட சகல முஸ்லிம் வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர்.
ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தில் இருப்பதால், அவர் செல்வாக்கை இழப்பாரே தவிர முஸ்லிம் மக்கள் அவருக்காக மகிந்தவுக்கு வாக்களிக்க போவதில்லை. இதில் எந்த சந்தேகமும் இல்லை.
அத்துடன் வடக்கில் தமிழ் மக்களின் வாக்குகளும் மகிந்த ராஜபக்சவுக்கு கிடைக்காது. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியடைந்தது. இதனால் மகிந்த ராஜபக்ச தோல்வியடைவார் எனவும் லால்காந்த மேலும் தெரிவித்துள்ளார்.