Breaking
Thu. Jan 16th, 2025

-ஊடகப்பிரிவு-

இன்று இந்த நாட்டு முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒரேயொரு கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாத்திரம்தான் உள்ளது என காத்தான்குடி நகர சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தாறுஸ்ஸலாம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எம்.எம். மாஹிர் தெரிவித்தார்.

அவரது பிரசார அலுவலகம் காத்தான்குடி தாறுஸ்ஸலாம் வீதியில் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பக்கம் மக்கள் அணியாகத் திரண்டு கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுக்கக்கூடிய ஒரேயொரு கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாத்திரமே உள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று வழி தவறிப் பயணிக்கின்றது. அதன் தலைவர் நடந்துகொள்ளும் முறையினால் மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் மீது அதிருப்தியடைந்து வருகின்றனர்.

எமது கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன், அதன் தவிசாளர் பிரதியமைச்சர் அமீர் அலி ஆகியோர் பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் இன்று இந்த சமூகத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முஸ்லிம்களின் விரோதியாக முஸலிம்கள் மத்தியில் காட்டினார். மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்த இவர் மைத்திபால சிறிசேன வெற்றி பெற்றால் முஸ்லிம்கள் தமது வணக்க வழிபாடுகளை செய்ய முடியாது எனவும் அன்று பிரசாரம் செய்தார்.

இவ்வாறெல்லாம் பிரசாரம் செய்துவிட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரியை காத்தான்குடிக்கு அழைத்து வருகின்றார் என்றால் அதுதான் பெரிய வேடிக்கையாகும்.
முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு மைத்திரிபால சிறிசேனாவுக்கு வாக்களித்து ஜனாதிபதியாக்கினோம். மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பினோம். ஆனால் முஸ்லிம்களுடைய விருப்பங்களுக்கு மாற்றாக நமது பிரதேசத்தில் இராஜாங்க அமைச்சர் செயற்பட்டார். அரசியலில் இவர்களுக்கெல்லாம் ஒரு கொள்கை கிடையாது. காலத்துக்குக் காலம் தமது கொள்கைகளை மாற்றிக் கொள்வார்கள்.

நான் பிரதியமைச்சர் அமீர் அலியின் இணைப்பாளராக இருந்து இந்த காத்தான்குடிக்கு என்னலான சமூகப்பணியினை மேற்கொண்டு வருகின்றேன். வாழ்வாதார உதவிகளை பிரதியமைச்சர் அமீர் அலியின் ஊடாக வழங்கி வருகின்றேன். பல வீதிகளை அமைத்துள்ளோம். பலருக்கு என்னால் முடியுமான உதவிகளை வழங்கியிருக்கின்றேன் என்றார்.

Related Post