என் மீது சுமத்தப்படுவது போலி குற்றச்சாட்டுக்கள் எனவும்,இதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட அமைப்புக்களின் மற்றுமொரு சதியாகும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் மன்னார் மாவட்டத்தில் எந்தவொரு வெளி மாவட்டத்தாரின் குடியேற்றமும் இடம் பெறவில்லையெனவும், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களே மீளக்குடியேறுவதாகவும் கூறினார். தற்போது தொடர்ச்சியாக சில ஊடகங்கள் வெளியிட்டுவரும் வில்பத்து காட்டுப் பகுயினை அமைச்சர் றிசாத் பதியுதீன் அழிப்பதாக கூறும் செய்தி தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் வியாழக்கிழமை கொழும்பில் இடம் பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அமைச்சர் இங்கு தெரிவிக்கையில் – கடந்த அரசாங்கத்தின் மீள்குடியேற்ற அமைச்சராக தான் இருந்த போது முன்னாள் ஜனாதிபதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோருடன் இணைந்து இறுதி யுத்தத்தின் போது முல்லிவாய்க்கால் ஊடாக வந்த 3 இலட்சம் தமிழ் மக்களை பராமரித்து அவர்களை மீண்டும் அவர்களது பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்தோம். இதன் பிற்பாடு இடம் பெயர்ந்து 20 வருடத்துக்கு மேலாக வாழும் முஸ்லிம்,சிங்கள மக்களின் மீள்குயேற்றம் பற்றி பேசினோம்.ஆனால் அரசாங்கம் இது தொடர்பில் அக்கறை செலுத்தவில்லை.திட்டமிடப்பட்ட மீள்குடியேற்றம் அங்கு நடை பெறவில்லை.அவர்களது காணகள் துப்பரவு செய்து கொடுக்கப்படவில்லை.இந்த நிலையில் அந்த மக்களது வாக்கினால் பாராளுமன்ற சென்ற நான் இது தொடர்பில் பேசுவது அல்லது முயற்சிப்பது பிழையா,?இதனை வைத்துக் கொண்டு சில ஊடகங்கள் எமக்கு எதிராக உண்மைக்கு புறம்பான் செய்திகளை வெளியிடுவதுடன்,முஸ்லிம்கள் தொடர்பில் ஏனைய மதத் தவர்கள் மத்தியில் பிழையான பார்வையினை ஏற்படுத்துகைின்றனர். இந்த நாட்டில் மத சுதந்திரம் இருக்கின்றது.ஆனால் கடந்த அரசாங்கத்தின் இறுதி இரண்டு வருடங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இனக் குழுக்கள் மேற்கொண்ட அடக்குமுறைகள் குறித்து நாம் அறிவோம்.அது போன்று தான் இந்த வில்பத்து விடயத்தை பார்க்கின்றேன். நான் காணி அமைச்சரல்ல.இந்த மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் உரிய அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைய வழங்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக கூறிக் கொள்ளவிரும்புகின்றேன். வடக்கு முஸ்லிம்கள் இந்த நாட்டை பிரிப்பதற்கு துணை போனவர்கள் அல்ல.இந்த நாட்டில் அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்ற ஆசையுடன் வாழ்பவர்கள் என்று கூறிய அமைச்சர் றிசாத் பதியுதீன்,என் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் பட்சத்தில் அதற்கான தண்டனையினை ஏற்றுக் கொள்ள தயாராகவுள்ளேன். அதே வேளை அரசாங்கத்தில் உள்ள அமைச்சரவை அமைச்சர் என்ற வகையில் இது தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதியிடம் கோறிக்கைவிடுத்துள்ளேன்.ஊடகங்கள் கூறுவது போல் நான் பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் வேறு மாவட்ட மக்களை மீள்குடியேற்றம் செய்திருப்பதை ஊர்ஜிதம் செய்தால் எனது அமைச்சுப் பதவியினையும் துறக்க தயாராகவுள்ளேன் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியதுடன்,அனைத்து ஊடகவியலாளர்களையும் இந்த பிரதேசத்துக்கு பகிரங்கமாக விஜயம் செய்து உண்மைகளை வெளிக் கொண்டுவருமாறும் அழைப்பு விடுத்தார். அதே வேளை தம்மீது சில முகநுால் காரர்கள் சுமத்தும் போலியான தகவல்களின் பிரதி களையும் ஊடகவியலாளருக்கு எடுத்துக்காட்டினார்.