Breaking
Thu. Dec 26th, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆராயும் என்று இலங்கையின் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிபிசிக்கான பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்துவிட்டாலும், தமிழர்களின் பிரச்சினை இன்னமும் தீரவில்லை என்றும் அதேவேளை முஸ்லிம்களும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளதாகவும் கூறி, இந்த சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான பொதுவேட்பாளரின் திட்டம் என்ன என்று பிபிசியின் சரோஜ் பத்திரன கேட்ட கேள்விக்கு பதிலளித்த மைத்திரிபால சிறுசேன அவர்கள், தமது முதல் 100 நாட்களுக்கான நடவடிக்கை திட்டத்தில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து உள்ளடக்கப்படவில்லை என்றும், தேர்தலின் பின்னர் அமைக்கப்படவிருக்கும் தேசிய அரசாங்கமே அதனை ஆராயும் என்றும் குறிப்பிட்டார்.
”எமது கூட்டணியில் பல அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களது கட்சி, ஹெல உறுமய என பல அரசியல் கட்சிகள் எங்கள் அமைப்பில் உள்ளன. அதனை விட பல பொது அமைப்புக்களும் அதில் அடங்குகின்றன. எங்களது கூட்டணியில் செயற்திட்டமாக 100 நாட்களுக்கான திட்டம் ஒன்றை நாங்கள் ஏற்கனவே பிரசுரித்திருக்கிறோம். இந்த 100 நாள் திட்டத்தில், நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒழித்தல், அரசியலமைப்பில் மாற்றங்களை செய்தல் மற்றும் வறிய மக்களின் நலன்களுக்கான பொருளாதார மறுசீரமைப்பு ஆகியன அடங்கியுள்ளன. எமது 100 நாள் திட்டத்தில் இவை மாத்திரந்தான் இருக்கின்றன. இதில் ஏனைய விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை. ஆனால், தேர்தலுக்கு பின்னர் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கியவாறான ஒரு தேசிய அரசாங்கத்தை நாங்கள் அமைப்போம். அந்த அரசாங்கந்தான் சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கும்.” என்றார் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன.
ஒருவேளை தற்போது இருக்கும் நாடாளுமன்றத்தில் அனைவரையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான சூழ்நிலை ஏற்படவில்லையானால், இந்த நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவேன் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், அந்த முறைமையின் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களையும் தான் ரத்துச் செய்துவிடுவேன் என்றும், ஆனால், முப்படைகளின் தளபதியாகவும் மற்றும் மாகாணசபைகளை கட்டுப்படுத்துவதற்காகவும் இருக்கும் அதிகாரங்களை தன்வசம் வைத்துக் கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Post