ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம் வாக்குகள் திட்டமிட்டு பக்கசார்பாக அளிக்கபட்டமையினால் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தோற்கடிக்கப்பட்டார் என தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் ஊடகப்பேச்சாளர் வைத்தியகலாநிதி வசந்த பண்டார தெரித்தார்.
கொழும்பு தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் அலுவலுகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டின் சிங்கள பௌத்த மக்கள் அனைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கே வாக்களித்தனர். அதனால் சிங்கள மக்கள் செறிந்து வாழும் 10 தேர்தல் மாவட்டங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றிருந்ததுடன் தனியொருவராக 52 இலட்ஷம் வாக்குகளையும் பெற்றுக்கொண்டிருந்தார்.
ஆனால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் போதியளவு இல்லாத காரணதிகாலேயே அவர் தோல்வியுற்றார். சிறுபான்மை வாக்குகள் திட்மிட்டே வழங்கப்பட்டன. முக்கியமாக முஸ்லிம் மக்களின் வாக்குகள் அவ்வாறு திட்டமிட்டு வாக்களித்தமையினால் தான் மஹிந்த வீழ்த்தப்பட்டார் என்பதே உண்மை.
முன்னர் 1977 ஆம் ஆண்டு நாட்டில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சி செய்த போது நாடு முழுவதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அவ்வாறான நிலைமைகளை நாட்டு மக்களிடையே மீண்டும் ஏற்படுத்த கூடாது என்ற எண்ணத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார். இதனை கருத்திற்கொண்டு முஸ்லிம் மக்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது வாக்களிக்க வேண்டும்.
நாட்டின் சிங்கள மக்கள் பிரதமர் ரணில் சிங்கள விரோதி என்பதை அறிந்துள்ளனர். அதனாலேயே கடந்த தேர்தலின் போது சிங்கள மக்கள் அதிகபட்ச வாக்குகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வழங்கியிருந்தனர். எதிர்வரும் தேர்தலின் போதும் அவ்வாறே வாக்களிப்பர் என்பதில் சந்தேகம் இல்லை.
எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி குருணாகல் மாவட்த்தில் போட்டியிட முடிவு செய்துள்ளமை வரவேற்கத்தக்கது. அவர் மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு வழிவகுத்த பாராளுன்ற உருப்பினர்களான சுசில்,விமல்,வாசு, தினேஸ், டலஸ் உள்ளிட்ட பலரும் பாராட்டுக்குரியவர்கள் மஹிந்தவின் வெற்றியின் பெரும்பங்கு அவர்களையே சாரும்.