Breaking
Mon. Dec 23rd, 2024

முறையற்ற வார்த்தைப்பிரயோகங்களைப் பாவித்து முஸ்லிம்களைத் தாக்குவதை பொதுபல சேனா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரவித்துள்ளார்.

 அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்ககப்பட்டுள்ளதாவது,

 பொதுபலசேனாவின் சித்தப்பிரமை பிடித்த சிலர் முளைக்கும் நாக்கிற்கும் தொடர்பில்லாமல் முஸ்லிம்களை வம்பிற்கு இழுப்பதை தொடர்ந்தும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. அதேநேரம் அவர்கள் பாவிக்கின்ற வார்த்தைப்பிரயோகங்களை மற்றவர்களுக்கும் பாவிப்பதற்கு நேரம் தேவைப்படாது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் கீழ்த்தரத்திற்கு நாங்களும் இறங்கக்கூடாது என்பதற்காக நாங்கள் கண்ணியமாக நடப்பதை பலயீனமாக பொதுபல சேனா நினைத்தால் அது அவர்களின் முட்டாள்தனம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 ஞானசார தேரருக்கு முஸ்லிம்களால் ஏதாவது கொடுமதி இருக்கின்றதா ? அல்லது வேறு யாரிடமும் தருமதியை எதிர்பார்த்து அவர் உளறித்தள்ளுகிறாரா ? என்று அறிய விரும்புகினே்றோம்.

 றவூப் ஹக்கீமுக்கும், அரசாங்கத்திற்குமிடையில் ஏதாவது இரகசிய ஒப்பந்தம் இருக்கின்றதா ? என்ற கேள்வி அன்மைக்கால சில நிகழ்வுகளைப்பார்க்கின்றபோது எழுகின்றது. ஏனெனில் பொதுபலசேனாவும், ஏனைய இனவாத சக்திகளும் முஸ்லிம்களின் உணர்வுகளை உரசிப்பார்த்தபோதெல்லாம் மௌனம் காத்த ரவூப் ஹக்கீம் எத்தனையோ பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டபோதும் மற்றும் விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெற்றபோதும் அந்த இடங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்குக்கூட முயலாத றவூப் ஹக்கீம் தேர்தல் மேடைகளில் மீண்டும் முஸ்லிம்களின் உணர்வுகளைத்தட்டி விடுகின்ற ஆவேசப் பேச்சுக்களைப்பேச ஆரம்பித்திருக்கின்றார். பொதுபல சேனா உத்தியோகப்பற்றற்ற பொலிஸ்காரனாக, ஆயுதப்படையாக செயற்படுவோம் என்று அறிக்கைவிட்டது இதுதான் முதற்தடவையல்ல.

 இதற்கு முன்னர் இவ்வாறான அறிக்கைகளை அவர்கள் வெளியிட்டபோதெல்லாம் பொட்டிப்பாம்பாக அடங்கியிருந்த றவூப் ஹக்கீம் இப்பொழுது தேர்தல் நடைபெறுகின்றது என்பதால் பொதுபலசேனாவைத் தாக்கினால் தன்னையும், முஸ்லிம் சமூதாயத்தையும் அவர்கள் மீளத்தாக்குவார்கள். அவ்வாறு தாக்குகின்றபோது முஸ்லிம் சமூகத்தின் அநுதாபமும், அபிமானமும் தன்னை நோக்கித் திரும்பும். அதன் மூலம் சரிந்து கிடக்கின்ற தனது வாக்கு வங்கியை மீண்டும் சரிசெய்து கொள்ளலாம். என்கின்ற தனது வழமையான உக்தியை இத்தேர்தலிலும் கையாள ஆரம்பித்திருக்கின்றார்.

 அன்மையில் றவூப் ஹக்கீம் பேசுபொருளாக மாறியிருப்பதன் காரணம் அன்மைக்காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளையிடம் அறிக்கை சமரப்பித்தார் என்பதாகும். ஆனால் இது தொடர்பாக இலங்கையில் இன்னும் எத்தனையோ தரப்புக்கள் நவநீதம்பிள்ளைக்கு மாத்திரமல்ல வேறு தரப்புக்களுக்கும் அறிக்கைகள் சமர்ப்பித்திருக்கின்றார்கள். அவை எல்லாம் கசிந்துவிடவுமில்லை. பேசுபொருளாக மாறவுமில்லை.

 அமெரிக்கா நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வருவதற்கு முன்பே மதஸ்தலங்கள் தொடர்பான தாக்குதல்கள் தொடர்பாக தனது கரிசனையைத் தெரிவித்திருந்தது. மட்டுமல்லாமல் நவநீதம்பிள்ளை இலங்கை வந்து மாதங்களாகிவிட்ட நிலையில் அமைச்சர் றவூப் ஹக்கீம் கையளித்ததாக கூறப்படுகின்ற அறிக்கை இத்தேர்தல் காலத்தின்போது கசிய விடப்பட்டிருப்பதும், அமைச்சரவையில் சில இனவாத அரசியல் கட்சிகளின் முன்னெடுப்புடன் அது பேசுபொருளாக மாற்றப்பட்டிருப்பதும் பாரிய சந்தேகங்களைத் தோற்றுவிக்கின்றது.

 அதேவேளை ஜனாதிபதி இவரை வெளியே போங்க்ள என்பதும் இவர் போகமாட்டேன் என்று இருப்பதும், வெளியே போங்கள் என்று சொல்லி ஜனாதிபதிக்கு அவரை வெளியே அனுப்பத்தெரியாமல் இருப்பதும், வெளியே போங்கள் என்றாலும் அது றவூப் ஹக்கீமுக்கு துளியளவும் உறைக்காமல் இருப்பதும், இதை வைத்து இனவாத சக்திகள் அவரைத் தாக்குவதும், இவ்வளவு காலமும் பேசாத வாய் தேர்தல் காலத்தின்போது மாத்திரம் அதற்குப்பதில் கூறுவதும் ஒரு பெரும் நாடகமாக இருக்கின்றது.

 றவூப் ஹக்கீம் ஏற்கனவே இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியை ஆதரிக்கப்போவதாக பிரகடனப்படுத்தியிருக்கின்றார். எனவே சரிந்துபோயிருக்கின்ற றவூப் ஹக்கீமின் வாக்கு வங்கியை மீளவும் சரிப்படுத்தி அதனைப்பெரும்பாலும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதற்காக ஆடப்படுகின்ற நாடகமா இது ? என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாததாகின்றது.

 அதேநேரம் இந்த இனவாதக்கட்சிகளும், பொதுபல சேனாவும் இந்நாடகத்தின் கதா பாத்திரங்களா ? என்ற கேள்வியையும் இங்கு எழுப்பாமல் இருக்க முடியாது. இந்த இடத்தில் பொதுபல சேனாவிற்கு நாங்கள் கூற விரும்புவதெல்லாம் உங்கள் நாடகத்தில் முஸ்லிம் சமூதாயத்தை பங்குதாரராக இழுக்க வேண்டாம். அவ்வாறு தொடர்ந்தும் இழுத்தால் நாம் எதற்கும் தயார் என்கின்ற ஒரு நிலைப்பாட்டை முஸ்லிம்கள் எடுப்பது தவிர்க்கமுடியாததாகிவிடும்.

 எந்தவொரு பிரச்சினையையும் முடிந்தளவு உள்நாட்டிற்குள்ளேயே தீர்க்க வேண்டும். என்கின்ற நிலைப்பாட்டில் எமக்கு எதுவித முரண்பாடுகளும் இல்லை. அதேநேரம் அவ்வாறு தீர்வுகாண முடியாது என்கின்றபோது நாட்டிற்கு வெளியே செல்லவே கூடாது “தலைவிதியே” என்று அழுதுகொண்டு மூலையில் முடங்கிக்கிடக்க வேண்டும். என்கின்ற நிலைப்பாட்டிலும் எமக்கு உடன்பாடில்லை.

 ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் பதவியும், ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலும் உருவாக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு முறையிடக்கூடாது என்றால் தேங்காய் துருவுவதற்கா ? என்று வினவ விரும்புகின்றோம். இந்நிறுவனங்களை உருவாக்குவதில் இலங்கைக்கும் பங்குண்டு என்கின்றபோது அந்நிறுவனத்திற்கு முறையிடுவதை சட்டவிரோதமாகவோ அல்லது தேசத்துரோகமாகவோ யாரும் கூறவும் முடியாது.

 அவ்வாறு இலங்கை அரசாங்கம் இதுவரை பிரகடனப்படுத்தவுமில்லை. மறுபுறத்தில் இலங்கை அரசுக்கு எதிராக ஜெனீவா சென்று பிரச்சாரம் செய்துகொண்டிருக்கின்ற தமிழ் தரப்புக்களை யாரும் துரோகிகள் என்று பட்டம் சூட்டவுமில்லை. ஆனால் அரசாங்கத்திற்குள் இருக்கின்ற ஒரு சில இனவாதிகள் மாத்திரம் இத்தேர்தல் களத்தில் அவர் நவிப்பிள்ளைக்கு கையளித்ததாக கூறப்படுகின்ற அறிக்கையை சாட்டாக வைத்து துரோகி என்பதும், தேர்தல் காலங்களில் மாத்திரம் வாய்திறக்கின்ற ஹக்கீம் விழுந்தடித்துக்கொண்டு இதற்கு பதில் கூறுவதும் அதற்கு பொதுபல சேனா எதிர்த்தாளம் போடுவதும் என்று முஸ்லிம்களுக்கு மத்தியில் றவூப் ஹக்கீமுக்கு சாதகமாக ஒரு அனுதாப, ஒரு அபிமான உணர்ச்சி அலைபோன்று செயற்கையாக உருவாக்கலாம் என்ற ஒரு முயற்சி அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.

 எனவே இந்தக்கதா பாத்திரங்களுக்கு நாம் கூறிவைக்க விரும்புவது உங்கள் நாடக மேடையில் முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாக பாவிக்க முயற்சிக்க வேண்டாம் என்பதாகும். அதேநேரம் நாட்டிற்கு வெளியே பிரச்சினைகளை கொண்டுசெல்லக்கூடாது என்று அரசாங்கம் விரும்பினால் உத்தியோகப்பற்றற்ற ஆயுதப்படையாக செயற்படுவோம் என்று பல தடவைகள் அறிவித்திருக்கின்ற பொதுபல சேனாவைச் சேர்ந்தவர்களை உடனடியாக கைதுசெய்து விசாரிக்க வேண்டும். அதேநேரம் ஒரு சமூகத்தை இன மத ரீதியாக துாண்டிக்கொண்டிருப்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகின்றோம்.

Related Post