Breaking
Sun. Dec 22nd, 2024

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள இலங்கை  இராணுவத்தின் முக்கியமான முகாம்கள் எவையும் அகற்றப்படமாட்டாது.. தேசிய பாதுகாப்பில் வடக்கு கிழக்கும் உள்ளடங்கும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச  பயங்கரவாத அச்சுறுத்தல் இலங்கைக்கு இருந்த போதிலும் இலங்கை  முஸ்லிம்கள் மீது நம்பிக்கை உள்ளது எனவும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள  இராணுவ முகாம்கள் அகற்றப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் வினவியபோதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு கிழக்கில் தேவையற்ற இராணுவ முகாம்களை அரசாங்கம் அகற்றியுள்ளது. வடக்கில் பொதுமக்களின் காணிகளில் இருந்த இராணுவ முகாம்கள்  அகற்றப்பட்டு பொதுமக்களுக்கு மீளவும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல் கிழக்கிலும் அனாவசிமான முகாம்களை  அகற்றியுள்ளோம். எனினும் தேசிய பாதுகாப்பு விடயங்களை கருத்தில் கொண்டே நாம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். வடக்கிலும் கிழக்கிலும் ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக  அங்குள்ள முகாம்களை முழுமையாக அகற்ற முடியாது. வடக்கும் கிழக்கும் இலங்கையின் மாகாணங்களேயாகும். ஆகவே அவற்றை தனித்து செயற்படுத்த அனுமதிக்க முடியாது.   கிழக்கில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான இராணுவ படை முகாம்கள் அகற்றப்படமாட்டாது. வடக்கிலும் முகாம்கள் முழுமையாக அகற்ற முடியாது.

 சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல் செயற்பாடுகள் இலங்கைக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடுகளில் இலங்கையும் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு இருக்கையில் இலங்கையின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த காரணத்திற்காக இலங்கை முஸ்லிம்கள் மீது சந்தேகப்பார்வையில் செயற்பட முடியாது. எமது மக்கள்மீது அரசாங்கம் நம்பிக்கை வைத்துள்ளது. அந்த நம்பிக்கையை மக்கள் காப்பற்றுவார்கள் என்றார்.

 

By

Related Post