Breaking
Sat. Dec 21st, 2024

“ஹிஸ்புல்லாஹ், தான் எம்.பி.யாக வேண்டும் என்பதற்காக, எதையும் செய்யக் கூடிய ஒருவர்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

“ஹிஸ்புல்லாஹ் நொந்து நூலாகிப்போன நேரத்தில், அவரை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றிபெற வைத்தோம். வெற்றி பெற்றதன் பின்னர், எங்களுக்குத் தெரியாமலே மஹிந்த ராஜபக்ஷவிடம் சென்று அமைச்சைப் பெற்றுக்கொண்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தல் கேட்டபோது, சஜித் பிரேமதாசவுக்கு  முஸ்லிம் சமூகத்தால் அளிக்கப்படவிருந்த வாக்குகளை குறைப்பதற்காக, பசில் ராஜபக்ஷவின் கொந்தராத்து மூலம், ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் என்று தேர்தலில் போட்டியிட்டு சதி செய்தார்.

அவர், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களை பிழையாக வழி நடத்துகின்ற, பொய்த் தகவல் சொல்லுகின்ற ஒரு மகா பொய்யன். இதை நான் சொல்லவில்லை. அவரது தலைவரே சொல்லி இருக்கிறார். “அவர் ஒரு மகா நடிகன், அண்டப்புளுகன்” என்றெல்லாம் அவரது தலைவர் சொல்லி இருக்கின்றார். தேர்தலில் 42,000 எடுப்போம், 52,000 எடுப்போம் என்று ஹிஸ்புல்லாஹ் கூறித் திரிகிறார். அவரால் இந்தத் தேர்தலில் 22,000 கூட தாண்ட முடியாது.

அவர் கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டபோது, ஒப்பந்த அடிப்படையில் இரண்டு வருடங்கள் கல்குடாவுக்கு வழங்குவதாகக் கூறி ஏமாற்றியவர். இந்த விடயத்தில் காத்தான்குடி மக்களும் ஹிஸ்புல்லாஹ் அநியாயம் செய்துவிட்டார் என்று, அன்று முதல் இன்று வரை குற்றம் சுமத்துகின்றனர்.

இனியும் கல்குடா, ஏறாவூர், காத்தான்குடி சமூகம் உங்களது வார்த்தைகளை நம்பிக்கைகொள்ளும் என்றா நீங்கள் எதிர்பார்கின்றீர்கள்?” என்று ஹிஸ்புல்லாஹ்விடம் தவிசாளர் அமீர் அலி கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Post