யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது சட்ட வரைவிலக்கணத்துக்கமைய, இனச் சுத்திகரிப்பே ஆகும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பலவந்தமாக ஓர் இனத்தை ஒரு பிரதேசத்திலிருந்து வெளியேற்றியமையை, இனப் பாதுகாப்பு எனக் கூறுவது, அவர்களை மேலும் அவமானப்படுத்தும் செயலாகும் எனவும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையானது இனப்பாதுகாப்பு என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோர் தெரிவித்த கூற்றுக்களுக்கு மறுதலிக்கும் வகையில், கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
‘யாழ். முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள், இனச்சுத்திகரிப்பு செய்யவில்லை, மாறாக இனப் பாதுகாப்புக்காகவே அவர்கள் பாதுகாப்பாக, எந்தத் தாக்குதலும் இல்லாமல் வெளியேற்றப்பட்டார்கள் எனக்கூறுவது, ஏற்றுக்கொள்ள முடியாத விடயமொன்றாகும். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது, சட்ட வரைவிலக்கணத்துக்கமைய, இனச்சுத்திகரிப்பே ஆகும். அதில், எவ்வித மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை.
இனச் சுத்திகரிப்புக்கென ஒரு சட்ட வரைவிலக்கணம் உள்ளது. அதாவது, ஓர் இனத்தை, ஓர் இடத்திலிருந்து முற்றாக வெளியேற்றினால் அது, இனச் சுத்திகரிப்பாகும். அதற்கமைவாகவே நான், இந்தக் கருத்தை முன்வைத்தேன்’ என்றார்.
மேலும், ‘இந்தக் கருத்து, நான் இப்போது கூறியது அல்ல. மாறாக, 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், வந்தாறுமூலையில் நடைபெற்ற கூட்டமொன்றிலும், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது இனச்சுத்திகரிப்பே ஆகும் எனக் கூறியிருந்தேன். அந்தக் கூட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனும் பிரசன்னமாகியிருந்தார். அப்போது நான் கூறிய கருத்துத் தொடர்பில் அவர், மறுதலிப்பை வெளிப்படுத்தியிருக்கவில்லை.
தற்போது நான் முன்வைத்த கருத்தை அவர், எவ்வாறு மறுதலிக்க முடியும்? யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது இனப்பாதுகாப்பு எனக் கூறுவது நகைப்புக்குரிய விடயமாகும்.பலவந்தமாக ஓர் இனத்தை ஒரு பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை எவ்வாறு இனப்பாதுகாப்பு எனக் கூறுவது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.f