Breaking
Thu. Dec 26th, 2024

முஸ்லிம்கள் அதிகமாக செறிந்து வாழும் சீனாவின் மேற்கு சின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம் பெண்கள் பொதுமக்கள் மத்தியில் பர்க்கா அணியத் தடை விதிக்கும் சட்டத்தை அம்மாகாண சட்ட மன்ற உறுப்பினர்கள் அமுல் படுத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மிக நீண்ட காலமாக இம்மாகணத்தில் பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி பர்க்கா அணிவதற்கு எதிராக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப் பட்டிருந்தன.

பர்கா அணிவதற்கான இப்புதிய தடைச் சட்டம் கடந்த மாதம் தான் உரும்கியில் உள்ளூர் சட்ட மன்ற உறுப்பினர்களால் அனுமதிக்கப் பட்டிருந்ததுடன் இது மாகாண சட்ட மன்றத்துக்கு பச்சை நிற சமிக்ஞையும் காட்டியிருந்தது. சின்ஜியாங் மாகாணத்தில் துருக்கி மொழி பேசும் உய்குர் முஸ்லிம்கள் மிகப் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட்டில் சின்ஜியாங்கின் இன்னொரு நகரில் மக்கள் இஸ்லாமிய கலாச்சார அடிப்படையிலான உடை அணிந்தும் நீண்ட தாடிகளுடனும் பேருந்துக்களில் ஏறத் தடை விதிக்கப் பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. சின்ஜியாங்கில் சமீபத்தில் மாணவர்களும் அரச உத்தியோகத்தர்களும் ரமழான் காலத்தில் நோன்பு நோற்கவும் தடை விதிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் வேலையில்லாப் பிரச்சினை, வீடமைப்பு மற்றும் கல்வி வாய்ப்புக்கள் புறக்கணிக்கப் படல் உட்பட மத சுதந்திரங்களும் மறுக்கப் படுவதால் ஒடுக்கப் பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்து இருந்தது.

சர்வதேச நாடுகளில் இதுவரை பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் மட்டுமே முஸ்லிம் பெண்கள் பொது மக்கள் மத்தியில் பர்க்கா அணியத் தடை விதித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post